ரஜினிகாந்த் படத்தை நான் இயக்கியிருந்தால் அது 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘பிரேமம்’. அந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படம் வெளியாகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஃபகத் பாசில், நயன்தாரா நடிப்பில் ‘பாட்டு’ படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் அல்போன்ஸ் புத்திரன்.
2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தப் படம் தொடங்கப்படாமலேயே இருந்தது. அதன் பிறகு ‘பாட்டு’ படத்தை ஒத்திவைத்துவிட்டு, ‘கோல்ட்’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். இதில் பிரித்விராஜ், நயன்தாரா இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் ரஜினியை வைத்து, தான் படம் இயக்கப் போவதில்லை என அல்போன்ஸ் புத்திரன் கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் அச்செய்தியில் உண்மையில்லை என்று அல்போன்ஸ் புத்திரன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
”2015ஆம் ஆண்டு ‘பிரேமம்’ ரிலீஸுக்குப் பிறகு, ஒரு இயக்குநராக நான் ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்க விரும்பினேன். 99% இயக்குநர்கள் அவரை இயக்க விரும்புவார்கள். ரஜினிகாந்த் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்க விரும்பவில்லை என்று ஒருநாள் ஒரு ஆன்லைன் பக்கத்தில் ஒரு கட்டுரை வந்தது. அந்தச் செய்தி சமூக வலைதளங்களிலும் பரவியது. அந்தப் பதிவு குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எனக்குத் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘பிரேமம்’ ரிலீஸுக்குப் பிறகு நான் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என்று அவருக்கு நான் பதிலளித்தேன். அதைப் புரிந்துகொண்ட அவர் ரஜினி சாரிடமும் இதுகுறித்துப் பேசினார். அதன் பிறகு அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.
2015ஆம் ஆண்டு முதல் இன்றுவரை அந்தப் போலிச் செய்தி என்னைத் தொந்தரவு செய்வதாக உணர்கிறேன். நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். ரஜினிகாந்த் சாரை வைத்து நான் விரும்பியபடி படம் இயக்கியிருந்தால், அப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும். மேலும் அரசாங்கத்துக்கும் வரி அதிகம் கிடைத்திருக்கும். நஷ்டம் எனக்கும், சூப்பர் ஸ்டாருக்கும், பார்வையாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும்தான்”.இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.