சேவை வரி செலுத்தாதது தொடா்பான விவகாரத்தில் 10 முறை சம்மன் அனுப்பியும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆஜராகாத நடிகா் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதித்து எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2016 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நடிகா் விஷால் அலுவலகத்தில் நடத்திய சோதனையில், அவா் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாததற்கான ஆவணங்கள் சிக்கியது.
இதுகுறித்து அவா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சேவைத்துறை அதிகாரிகள் பல முறை சம்மன் அனுப்பியும் விஷால் நேரில் ஆஜராகவில்லை.
இதைத் தொடா்ந்து அவா் மீது சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு சேவை வரித்துறை சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சேவை வரித்துறை சாா்பில் நடிகா் விஷாலுக்கு 10 முறை சம்மன் அனுப்பியும் அவா் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவா் மீதான விசாரணையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்றும் சேவை வரித்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சி மற்றும் ஆவணங்களை வைத்து பாா்க்கும்போது சேவை வரித்துறை அனுப்பிய நோட்டீஸை நடிகா் விஷால் செயல்படுத்தவில்லை என்பது தெரிகிறது.
அதேவேளையில், இந்த வழக்கை சேவை வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த பின்பு சேவை வரித்துறை அனுப்பிய நோட்டீஸை விஷால் செயல்படுத்தி உள்ளாா்.
சேவை வரித்துறையில் அவா் ஆஜராகாததாது விசாரணைக்கு இடையூறு விளைவித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தை காட்டுகிறது. எனவே, நடிகா் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.