கொரோனா தொற்று மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணப் பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று இரவு கொழும்பில் நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதன்படி, அனைத்து மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான வரி நீக்கப்படும் என்றார்.
அரச உத்தியோகத்தர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஊனமுற்ற இராணுவத்தினருக்கு மாதாந்தம் ரூபா 5,000/- வீதம் விசேட கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
சமுர்த்தி பெறுவோருக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 3500 ரூபா 1000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் 3500 ரூபாவிற்கும் குறைவாக பெறப்படும் சமுர்த்தி உதவிகள் விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
உர நெருக்கடியால் நெல் அறுவடை 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்றும், நஷ்டத்தை ஈடுகட்ட விவசாயிகளுக்கு கூடுதல் விலையாக கிலோவுக்கு ரூ.25 வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதன்படி, எதிர்காலத்தில் ஒரு கிலோ நெல் 75/- என்ற உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யப்படும் எனவும், அரிசியின் விலை உயர்வைத் தடுப்பதற்காக கூடுதல் பணத்தை திறைசேரி ஏற்கும் எனவும் தெரிவித்தார்.
திவிநெகும வேலைத்திட்டம் புத்துயிர் ஊட்டப்படவுள்ளதுடன், பயிரிடப்படும் வீட்டுத்தோட்டங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, 20 பேர்ச்சிற்கு குறைவான வீட்டுத்தோட்டத்திற்கு 5000/- ரூபாயும், 20 பேர்ச்சிற்கும் 1 ஏக்கருக்கும் இடைப்பட்ட வீட்டுத்தோட்டத்திற்கு ஊக்கத்தொகையாக ரூபா 10,000/- வழங்கப்படும். பயிர்ச்செய்கை வெற்றியளிப்பதாகக் காட்டப்பட்டால், 6 மாதங்களின் பின் இதே கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு தோட்டக் குடும்பங்களுக்கும் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை 80 ரூபா சலுகை விலையில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தோட்டத் தொழிலாளர் குடும்பமும் கோதுமை மா சலுகைக்கு உரித்துடையது.
இதன்படி, இந்த நிவாரணப் பொதிக்காக வருடாந்தம் 229 மில்லியன் ரூபா செலவிடப்படும் என்றும் அவர் கூறினார்.
அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயும், ஓய்வு பெற்றவர்களுக்கு 40 பில்லியன் ரூபாயும், வீட்டுத்தோட்ட மானியமாக 31 பில்லியன் ரூபாயும் கொடுப்பனவாக வருடாந்தம் 87 பில்லியன் ரூபா செலவிடப்படும்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பணம் திரட்டுவதற்காக வரிகள் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும், அதற்கான ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.