பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக ராஜமெளலியின் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்ஆர்ஆர்) உலகெங்கும் வெளியாகவிருந்தது. ‘பாகுபலி’க்குப் பிறகான ராஜமெளலியின் பிரம்மாண்ட படைப்பு என்பதாலும், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் எனப் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதாலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்பார்ப்புக்குரிய படமாக ‘ஆர்ஆர்ஆர்’ கவனம் ஈர்த்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 7ஆம் திகதி அன்று வெளியாகவிருந்த நிலையில், புரமோஷன் பணிகளுக்காக இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. ஆனால் அதிகரித்த வரும் கொரோனா அச்சம் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
”இடைவிடாத முயற்சியைத் தாண்டியும் சில சமயங்களில் சூழ்நிலை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் சென்றுவிடும். இந்திய மாநிலங்கள் பல திரையரங்குகளை மூடவுள்ளன. எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. நிச்சயமாக இந்திய சினிமாவின் பெருமையைச் சரியான நேரத்தில் நாங்கள் வெளியிடுவோம்” என்று வெளியீடு தள்ளிப்போனதை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது படக்குழு.
இந்த அறிவிப்பு ரசிகர்களைச் சற்று அதிருப்திக்குள்ளாக்கி இருக்கும் அதே வேளையில் படத்தின் வெளியீடு தாமதம் ஆவதன் பின்னணியில் கொரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லை என்கிறது தெலுங்கு ஊடகங்கள்.
முதலில் டிக்கெட் விலை சர்ச்சை. ஆந்திரத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் கடந்த சில மாதங்களாகவே ஓயாத பிரச்சினையாக இருப்பது டிக்கெட் விலை சர்ச்சை எனலாம். ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு சில மாதங்கள் முன்பு தியேட்டர்களில் புதிய டிக்கெட் விலையை நிர்ணயம் செய்தது. அதன்படி, சினிமா அரங்குகளின் இருக்கை எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கிராமப்புறம், நகரப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கு ஒவ்வொரு விகிதத்திலும் கட்டணம் விதிக்கப்பட்டது.
உதாரணத்துக்கு ஏசி வசதி கொண்ட சாதாரண தியேட்டர்கள் ரூ.150 வரையிலும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.250 வரையிலும், ஐமேக்ஸ் போன்ற பெரிய திரையரங்குகள் ரூ.300 வரையிலும் ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோக பராமரிப்புக் கட்டணமாக ரூ.3 முதல் 5 வரை தனியாகக் கட்டணம் வசூலிக்கலாம் என்று ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்தக் கட்டண உயர்வால் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன.
அரசின் இந்த நடவடிக்கைக்கு தெலுங்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. `பவர் ஸ்டார்’ பவன் கல்யாணின் `வக்கீல் சாப்’ படத்தின்போதே அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு தற்போது நடைமுறைக்கு வந்து தெலுங்கு திரையுலகில் மீண்டும் புயலைக் கிளப்பி வருகிறது. இது மட்டுமில்லாமல், சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கும் தியேட்டர்களுக்கு சீல் வைத்து வரும் ஆந்திர அரசு சமீபத்தில் 400 தியேட்டர்களில் சுகாதாரக் குறைபாடுகள் இருப்பதாகக் கடுமையாக எச்சரித்தது. இந்த தியேட்டர்கள் மூடப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஒமைக்ரோன் அச்சுறுத்தல் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதால் திரையரங்குகளை மூடவும், 50% இருக்கைகளுக்கு அனுமதி அளித்தும் மாநிலங்கள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலைகள் அனைத்தும் 450 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாராகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், `எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை’ என்று படத்தின் வெளியீட்டைப் படக்குழு தள்ளிவைப்பதாக அறிவித்து இருக்கிறது.
இதனிடையே, கடந்த சில வாரங்களாக ராஜமெளலி தலைமையில் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டிவந்தது ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா எனப் பல மாநிலங்களுக்குச் சென்று நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தது. சுமார் 50க்கும் மேற்பட்ட வீடியோ நேர்காணல்களில் அப்பட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இப்படி படத்தின் புரமோஷன் பணிகளுக்கு மட்டும் இதுவரை 12 முதல் 15 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக தெலுங்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.