மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (1) கொரோனா மரணம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 35 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை (1) இவ் வருடத்தின் முதலாவது கொரோனா தொற்று மரணம் பதிவாகி உள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் கடந்த 30 ஆம் திகதி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை (1) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இவ் வருடத்திற்கான 1 ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவாகி உள்ளது.தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 35 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 3183 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு 3166 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.