தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை 13வது திருத்தத்தை இடைக்கால ஏற்பாடாக அமுல்ப்படுத்த வலியுறுத்தி, தமிழ் பேசும் கட்சிகள் தயாரித்த ஆவணத்தில், தமிழ் தேசிய பரப்பிலிலுள்ள கட்சிகள் மாத்திரமே கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் முஸ்லிம் கட்சிகள் கையெழுத்திடுவதில் திடீர் தயக்கம் காட்டி வருவதை தமிழ்பக்கம் நம்கரமாக அறிந்தது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவரும் இந்த தகவலை தமிழ்பக்கத்திடம் உறுதி செய்தார்.
இனப்பிரச்சனைக்கு தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான அதிகார பரவலாக்கலை நிரந்தர தீர்வாகவும், அதை அடையும் வரையில் – இடைக்கால ஏற்பாடாக – 13வது திருத்தத்தை முழுமையாக – 1987ஆம் ஆண்டு குறிப்பிடப்பட்ட அதிகாரங்களுடன் – அமுல்ப்படுத்த வேண்டும், இந்திய – இலங்கை உடன்படிக்கையில் தமிழ் மக்களின் சார்பில் கையெழுத்திட்ட இந்தியா தனது கடமையை நிறைவேற்றி, ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தும் ஆவணம் தயாரிக்கும் பணி அண்மையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்ற இரா.சம்பந்தன், 13வது திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பல முறை பேசிவிட்டு, அதை கோரி கடிதத்தில் கையெழுத்திடுவது தனக்கு சங்கடமாக இருப்பதாகவும், அதனால் தனக்க சங்கடமில்லாத விதமாக கடிதத்தில் வசன மாற்றம் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு மற்ற கட்சிகள் ஆட்சேபணை தெரிவிக்காமல், சிறிய மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 21ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் மனோ கணேசன், என்.சிறிகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆர்.இராகவன், சுரேன் குருசாமி உள்ளடங்கலானவர்கள் சேர்ந்து இறுதி வரைபை தயாரித்தனர்.
இதன்படி, 13வது திருத்தம் என்பது இந்திய இலங்கை உடன்படிக்கை என மாற்றப்பட்டது. அன்று மாலை 5.30 மணிக்கே பணி முடிந்தது.
தமிழ் அரசு கட்சி சமர்ப்பித்த வரைபின் 2ஆம் பக்கத்தில் உள்ள விடயங்களை எடுத்து, ரெலோ தயாரித்த வரைபின் 3 பந்திகளை அகற்றுவது வரைபின் ஏனைய தீர்மானங்கள்.
இந்த தொழில்நுட்ப பணியை அன்றிரவு தான் முடித்து தருவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து, வரைபை வீட்டுக்கு கொண்டு சென்றார்.
எனினும், மறுநாள், வரைபின் திருத்தத்தில் தனித்து மாற்றம் செய்ததை போன்ற அபிப்பிராயம் தோன்றும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். எனினும், அது முதல்நாளில் அனைத்து தரப்பினரும் உட்கார்ந்த செய்த திருத்தம்.
இதன்பின்னர் தற்போது புதிய சிக்கல் தோன்றியுள்ளது.
இந்த கூட்டத்திற்கு ஆரம்பத்தில் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அழைக்கப்படவில்லை. எனினும், ரிஷாத் பதியுதீன் ஏற்பாட்டாளர்களை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமது கட்சியையும் கூட்டத்திற்கு அழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இதன்படி, இறுதிக்கலந்துரையாடலுக்கு வந்த ரிஷாத் பதியுதீனின் கட்சி பிரதிநிதி அமீர் அலி, இந்த ஆவணத்தில் தற்போது கையெழுத்திட முடியாது என தெரிவித்துள்ளார். தமது கட்சியின் மத்தியகுழு முடிவு அது என்றும் தெரிவித்துள்ளார்.
ரிஷாத் பதியுதீனின் கட்சி பின்வாங்கியதையடுத்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் பின்வாங்கியுள்ளது.
இந்திய – இலங்கை உடன்படிக்கை என்ற சொல்லை அகற்ற வேண்டும், 13வது திருத்தம் என்ற பதம் இருப்பதில் தமக்கு ஆட்சேபணை இல்லையென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
இந்திய – இலங்கை உடன்படிக்கைக்கு எதிராகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த தீர்வை தாம் வலியுறுத்த முடியாதென, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
29ஆம் திகதி அனைத்து தரப்பினரும் கொழும்பில் ஒன்று சேர்ந்து ஆவணத்தில் கையெழுத்திடுவது, பின்னர் இந்திய தூதரகத்தில் கையளிப்பதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், தற்போது அதில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்று (29) ஆவணத்தில் கட்சிகள் கையெழுத்திடப்பட மாட்டாது.
புதிய நிலைமையில் எவ்வாறான நகர்வை செய்வதென தீர்மானித்து செயற்பட மேலும் ஓரிரு நாட்களை எடுத்துக் கொள்வதென தமிழ்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
தற்போதைய நிலைப்படி, அனேகமாக தமிழ் தேசிய கட்சிகள் மாத்திரமே ஆவணத்தில் கையெழுத்திடும் நிலையுள்ளது. எனினும், முஸ்லிம் தரப்புக்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆவணத்தின் இறுதி நடவடிக்கைக்காக, 3 நாட்களாக கொழும்பில் தங்கியிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, இன்று யாழ்ப்பாணம் திரும்புகிறார்.
புதிய நிலைமையில், அடுத்த வருடத்தின் தொடக்க நாட்களிலேயே கையெழுத்திடும் பணி நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.