சினோபார்ம் தடுப்பூசி கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு செலவிடப்பட்ட 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி திருப்பிச் செலுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்துகளை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தடுப்பூசி முயற்சியின் வெற்றி மற்றும் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை ஆகியவை ஆசிய அபிவிருத்தி வங்கியால் இந்த முடிவை எட்டும்போது பரிசீலிக்கப்பட்டதாக கூறினார்.
இலங்கை டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில், 17 பில்லியன் ரூபா பெறுமதியான தொகையானது பாரிய வெற்றியாகும் என இராஜாங்க அமைச்சர் ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், தடுப்பூசிகள் வாங்கும் போது முறைகேடு நடந்ததாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர், இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்த நடவடிக்கை நல்ல பதிலடி என்று அவர் கூறினார்.
கொள்முதல் ஓர்டர்கள் மற்றும் பின்பற்றப்பட்ட முறையின் அனைத்து ஆவணங்களையும் ஆசிய அபிவிருத்தி வங்கி மதிப்பீடு செய்து 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்தும் முடிவை எட்டியதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.