ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளார். அவரது இராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜயசுந்தர மூன்று நான்கு பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும், தான் பதவியில் இருந்த காலத்தில் தான் எதிர்கொண்ட தடைகள் தொடர்பாகவும் விளக்கமளித்து, தற்போது பதவியை ராஜினாமா செய்ய ஜனாதிபதியின் அனுமதியை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ராஜபக்ச ராஜினாமாவை ஏற்றுக்கொண்டால், புத்தாண்டின் முதல் வாரத்தில் ஜெயசுந்தர பதவி விலக வாய்ப்புள்ளது.
ஜயசுந்தரவை ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுமாறு, அமைச்சரவை அமைச்சர்கள் கோரியிருந்தனர்.
அண்மைய அமைச்சரவைக் கூட்டங்களில், இந்த விடயம் அமைச்சர்களால் எழுப்பப்பட்டதுடன், அனைத்து அமைச்சர்களும் அவர் தொடர்பில் அதிருப்தி தெரிவித்து வந்துள்ளனர்.
ஜெயசுந்தரவிற்கு பதிலாக புதியவரை நியமிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
விடயங்கள் தொடர்பில் விவாதிக்க பி.பி.ஜயசுந்தரவை தொடர்புகொள்ள முடிவதில்லை என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று.
ஜயசுந்தரவிற்கு பதிலாக ஜனாதிபதியின் செயலாளராக, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் காமினி செனரத் அல்லது நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இவர்களில் காமினி செனரத்தே அனேகமாக நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.