சீமெந்து, மாவு மற்றும் எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகுவதற்கு புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில், புகையிரத பயணச்சீட்டு வழங்காமை மற்றும் பொதிகளை ஏற்று கொண்டு செல்வது போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இந்த சேவைகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்தார்.
இளநிலை புகையிரத ஊழியர்களின் பற்றாக்குறையும், சிரமத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் புதிய ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொலன்னாவ எண்ணெய் முனையத்திலிருந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விமான எரிபொருள் கொண்டு செல்வதும் தடைபடும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனது தன்னிச்சையான நடவடிக்கைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு புகையிரத பொது முகாமையாளரே பொறுப்பேற்க வேண்டும் என்று சோமரத்ன கூறினார்.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு செயற்குழு கூடியதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் முட்டுக்கட்டையில் முடிவடைந்துள்ளது.
புகையிரத பொது முகாமையாளர் அவர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை வழங்கத் தவறியதாகவும், உண்மைகளை முன்வைக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றும் சோமரத்ன குற்றம் சாட்டினார்.