இலங்கையில் உள்ளவர்களை வெளிநாட்டு பிரஜைகள் திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை என்ற புதிய அரசாங்க விதிமுறை தொடர்பாக சட்டத்தரணி திஷ்ய வெரகொட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கையில் உள்ள ஒருவரை வெளிநாட்டிலுள்ளவர் திருமணம் முடிப்பதெனில் பல சான்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்ற சில முன்நிபந்தனைகளை விதிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஞாயிறு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டதை அடுத்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி வெரகொட, “எனது பிள்ளைகளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள். ஒரு நாள் அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பும் போது, அவர்கள் பாதுகாப்பு செயலாளரிடம் அனுமதி கேட்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ள என் அனுமதியே தேவையில்லை. தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள அவர்கள் ஏன் வேறு சிலரிடம் – ஒரு அதிகாரத்துவரிடம் அனுமதி பெற வேண்டும்?”.
புதிய முன்நிபந்தனைகள் சட்டவிரோதமானது, சட்டத்திற்கு புறம்பானது, பகுத்தறிவற்றது, நியாயமற்றது, அபத்தமானது, அதிதீவிரமானவை மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது” என்று குறிப்பிட்ட அவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவை முன்னுரிமையின் அடிப்படையில் விசாரிக்குமாறு கோரினார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கூறப்படும் சுற்றறிக்கையை அமுல்படுத்த வேண்டாம் என பதிவாளர் நாயகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கட்டளையிடுமாறு திஷ்ய வெரகொட மேலும் கோரியுள்ளார்.