தமிழர்களை சிரமப்படுத்துவதற்காக சோதனை சாவடிகளை வைத்துள்ளார்களே தவிர தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பஞ்சமும் எமது நாட்டில் தலைவிரித்தாடுகின்றது.மக்களுக்கு நாட்டில் சாப்பாடு இல்லை.எதிர்வரும் காலங்களில் நெல்லின் விலை அதிகரிக்க கூடும்.இனி வீட்டிற்கு வீடு களவு நடக்க போகின்றது.தாய்மார்கள் தங்களது நகைகளை எங்கோ ஒளித்து வைத்து விட்டு தான் வாழக்கை நடத்த வேண்டிய சூழ்நிலை வரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திற்கு பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த சார்ஜன்ட் அழகரட்ணம் நவீணனின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
அமரர் அழகரட்ணம் நவீனன் மரணமடைந்த சம்பவமானது ஒரு துரதிஸ்டவசமான சம்பவம்.கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களை கவலை அடைய வைத்துள்ள சம்பவமாகும்.இவ்வாறான சம்பவங்கள் எமது மாகாணங்களில் இடம்பெறுவது வேதனைக்குரியது.இவரது குடும்பத்திற்கு அரசாங்கத்தினால் எந்தவொரு சலுகை வழங்கினாலும் அல்லது நஸ்டஈடு வழங்கினாலும் அந்த தாயிற்கு பிள்ளையை திருப்பி கொடுக்க முடியாது.இதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் அவரது தனிப்பட்ட விரோதங்கள் என கூறப்படுகின்றது.அத்துடன் விடுமுறை பிரச்சினை எழுந்தமையினால் இச்சூடு இடம்பெற்றதாக சொல்லப்படுகின்றது.புதுக்கதையாக அவர்(சுட்டவர்) மனநோயாளியாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.கிழக்கு மாகாணத்தில் மக்களின் பாதுகாப்பிற்கென மனநோயாளிகளையா வைத்திருக்கின்றீர்கள் என்ற கேள்வியை அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்.சுட்டவரை மனநோயாளியாக சித்தரிப்பதன் ஊடாக எமது பிரதேசத்தில் மனநோயாளிகளை கடமைக்காக நியமித்துள்ளீர்களா? என்கின்ற கேள்வி எழுகின்றது.இந்த அப்பாவி சகோதரரின் உயிரினை இன்று பலி கொடுத்திருக்கின்றோம்.
இது போன்று ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்திருக்கின்றோம்.இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலை நடக்க கூடாது.அரசுடன் இணைந்து எமது பகுதியில் செயற்படுபவர்கள் தங்களது வியாபார நோக்கத்திற்காக பொலிஸாரினை வைத்திருப்பதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பொலிஸார் தவறு செய்தால் தட்டி கேட்கும் தைரியம் இவர்களிடம் இல்லை.பொலிஸாருடன் இணைந்து வியாபாரங்களை செய்பவர்கள் அவர்கள் விடுகின்ற தவறுகளை எவ்வாறு தட்டி கேட்க முடியும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட ஒரு தாயின் காதை அறுத்து சென்ற சந்தேக நபர்களை அந்த பிரதேச இளைஞர்கள் தான் பிடித்தார்கள்.இவ்வாறு தான் கிழக்கு மாகாணத்தில் மோசமான நிலைமை காணப்படுகின்றது.நாங்கள் இந்த குடும்பத்திற்கு ஆறுதல் மட்டும் தான் கூறலாம்.தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது எந்த சந்தர்ப்பத்திலும் நீதிக்காக போராடும் ஒரு கட்சியாகும்.இந்த இளைஞர் விடயத்திலும் நீதிக்காக போராடுவோம்.அவருடன் இறந்த மூன்று சகோதரர்களுக்காகவும் குரல் கொடுப்போம்.
கிழக்கு மாகாணத்திலும் சரி வடக்கு மாகாணத்திலும் சரி சந்திக்கு சந்தி சோதனை சாவடிகளை நிறுவி அப்பாவி மக்களை சிரமப்படுத்தி வருகின்றீர்கள்.மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தினை நோக்கி பயணிப்பதாயின் 28 சோதனை சாவடியை கடக்க வேண்டும் என்பது உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும்.சோதனை சாவடியில் இறக்கி நடக்க வைத்து ஏற்றுகிறீர்கள்.ஆனால் துப்பாக்கி பிரயோகம் செய்த நபர் இரு துவக்கு மற்றும் 500 தோட்டாக்களுடன் மொனராகலை மாவட்டத்திற்கு எவ்வாறு சென்றார்.அவர் அங்கு செல்லும் வரை சோதனை சாவடியில் இருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். என்பதை கேட்கின்றேன். அவர் எத்தனை பேரை செல்கின்ற வழியில் அவர் சுட்டிருக்கலாம்.தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துகிறோம் என சிங்கள மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கியுள்ள கோட்டா அரசு அம்பாறை மாவட்டத்தில் இருந்து மொனராகலைக்கு தப்பி சென்ற துப்பாக்கி தாரியை பிடிக்கமுடியாமல் சென்ற பின்னர் என்ன தேசிய பாதுகாப்பு இங்கு உள்ளது என கேட்க விரும்புகின்றேன்.ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை வைத்து ஆட்சிக்கு வந்து இதை தான் செய்கின்றார்களா என்கின்ற சந்தேகமும் எம்முள் எழுந்துள்ளது.
தமிழர்களை சிரமப்படுத்துவதற்காக சோதனை சாவடிகளை வைத்துள்ளார்களே தவிர தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.நாங்கள் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.இனிவரும் காலங்களிலும் இவ்வாறான விடயங்களை நாங்கள் அனுபவிக்க வேண்டி வரும் நிலைமை உள்ளது.பஞ்சமும் எமது நாட்டில் தலைவிரித்தாடுகின்றது.மக்களுக்கு நாட்டில் சாப்பாடு இல்லை.எதிர்வரும் காலங்களில் நெல்லின் விலை அதிகரிக்க கூடும்.இனி வீட்டிற்கு வீடு களவு நடக்க போகின்றது.தாய்மார்கள் தங்களது நகைகளை எங்கோ ஒளித்து வைத்து விட்டு தான் வாழக்கை நடத்த வேண்டிய சூழ்நிலை வரும்.ஆகவே இந்த சம்பவத்தை நாங்கள் முழுமையான கவனத்தில் எடுப்போம்.நிச்சயமாக பாராளுமன்றத்திலும் நான் இவ்விடயத்தை எடுத்து கூறுவேன்.என குறிப்பிட்டார்.
-பா.டிலான்-