யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 3,001 கோடி ரூபாவை பெறும் நோக்கத்துடன், இளைஞனின் உறவினர் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி 3 பேர் சென்று சிக்கிய நிலையில், நேற்றும் (26) அங்கு சென்ற 3 பேர் சிக்கியுள்ளனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை, கொழும்பை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கில் கடந்த வருடம் 3,001 கோடி ரூபா பணம் வைப்பிலிடப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த மத்திய வங்கி, அந்த பணத்தை முடக்கியது. கனடாவில் இணையத்தளம் மூலமாக மோசடி மூலமாக திருடப்பட்ட பணமென அது கருதப்படுகிறது.
அந்த இளைஞன் சிஐடியினரால் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார். அந்த பணத்திருட்டில் அவர் தொடர்புபட்டதற்கான ஆதாரங்கள் இருக்கவில்லை.
இதையடுத்து, வவுனியாவில் அந்த இளைஞன் தங்கியிருந்த போது, மத்திய வங்கி ஊழியர் என கூறிய ஒருவர் உள்ளிட்ட குழுவினால் அந்த இளைஞன் கடத்தப்பட்டார். எனினும், அவர் தப்பியோடி பொலிசில் சரணடைந்ததை தொடர்ந்து, கடத்தல்காரர்கள் கைதாகினர்.
அதன்பின்னரும், அந்த இளைஞனின் மூலமாக பணத்தை பெற பல தரப்புக்கள் முயன்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இளைஞன் அடையாளம் தெரியாத இடமொன்றில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரியாலையிலுள்ள இளைஞனின் உறவினர்கள் வீட்டிற்கு கடந்த 21ஆம் திகதி இரவு சென்ற குழுவொன்று, குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளது.
இளைஞனின் இருப்பிடத்தை கேட்டதுடன், அவரது தொலைபேசி இலக்கத்தையும் கோரியுள்ளனர். சக்திமிக்க அரசியல் செல்வாக்குள்ளவர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், மத்தியவங்கியை சேர்ந்தவர்கள் என வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்து விட்டுள்ளனர்.
இளைஞன் சம்மதித்தால் பணத்தை உடனடியாக எடுக்கலாம், அவருடன் பேச வேண்டுமென கூறி, இளைஞனின் தொடர்பேற்படுத்துமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
குடும்பத்தினர் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (26) காலையில் மீண்டும் 3 பேர் அந்த இளைஞனின் உறவினர்களின் அரியாலை வீட்டிற்கு சென்றனர்.
தம்மை மத்திய வங்கி ஊழியர்கள் என கூறி, இளைஞனை தொடர்புகொள்ளுமாறு கூறியுள்ளனர்.
உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிசார் 3 பேரையும் கைது செய்தனர்.