அவுஸ்திரேலியாவில் COVID-19 பரிசோதனையில் தொற்று இல்லை எனச் சுமார் 1,000 பேருக்குத் தவறுதலாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சிட்னி நகரிலுள்ள St Vincent மருத்துவமனையின் SydPath ஆய்வுக்கூடத்தில் நேர்ந்த மனிதத் தவறு அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
இம்மாதம் 23, 24ஆம் திகதிகளில் பரிசோதனை மேற்கொண்டவர்களின் முடிவுகள் உறுதிசெய்யப்படுவதற்கு முன்பே தொற்று இல்லை என்ற தகவல் வெளியானதாகக் கூறப்பட்டது.
பரிசோதனையின் உண்மையான முடிவு, இன்றிரவுக்குள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே, தொற்றுக்கு ஆளான மேலும் சுமார் 400 பேருக்குக் தொற்றில்லை என தவறுதலாகத் தகவல் வழங்கியதை, ஆய்வுக்கூடம் ஒப்புக்கொண்டிருந்தது.
பரிசோதனைச் செயல்முறை, கடும் நெருக்கடியை எதிர்நோக்கும் வேளையில் இத்தகைய சம்பவங்கள் நேர்ந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.
மீண்டும் இதுபோல் நேராமல் தடுக்கத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுக்கூடம் குறிப்பிட்டது.