இலங்கை அடுத்த ஆண்டு கடுமையான மின் பற்றாக்குறையை எதிர்கொள்ளுமென தகவல் வெளியாகியுள்ளது.
அனல் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை, அதனை இறக்குமதி செய்ய டொலர் இல்லாமை, நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலைய பழுதுகள் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதிக்கு பின்னர் மின்சார சிக்கல் ஏற்படுமென இலங்கை மின்சார சபை, அரசாங்கத்தை எச்சரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய, சீன தொழில்நுட்ப குழு நாட்டிற்கு வர வேண்டியுள்ளது.
கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டதன் காரணமாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் உலை எண்ணெய் சேமிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. அதன் பங்குகள் சுமார் 16,000 மெட்ரிக் தொன் வரை குறைந்துள்ளது. தற்காலிகமாக மூடப்பட்ட சுத்திகரிப்பு நிலையம், டிசம்பர் 10, 20201 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கிய நிலையில், தினசரி உலை எண்ணெய் உற்பத்தியானது மின் உற்பத்திக்காக வெறும் 500 மெட்ரிக் தொன் வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சுத்திகரிப்பு நிலையம் இன்னும் 25 நாட்களுக்கு மட்டுமே தொடரும். அதாவது 12,500 மொட்ரிக் தொன் கூடுதல் உலை எண்ணெய் உற்பத்தி செய்யப்படும். திங்கட் கிழமை நிலவரப்படி, மின்சாரசபை மற்றும் மேற்கு கடற்கரை வளாகங்களில் முறையே 5,700 மற்றும் 15,500 மெட்ரிக் தொன் இருப்பு இருந்தன.
அதன்படி, தற்போது கிடைக்கும் எரிபொருள் இருப்பு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு உற்பத்தி, உலை எண்ணெய் கையிருப்பை மேம்படுத்தப்படாவிட்டால், அனல்மின் ஆலை இயக்கத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது என மின்சாரசபை, அரசுக்கு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கிடைக்கக்கூடிய எரிபொருள் இருப்பு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு உற்பத்தி ஆகியவை 2022 ஜனவரி நடுப்பகுதி வரை மட்டுமே செயற்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும். உலை எண்ணெயை இறக்குமதி செய்வதே இப்போது ஒரே வழி என்று அது கூறுகிறது.
ஜனவரி 2022 இல் 30,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெயை இறக்குமதி செய்ய மின்சாரசபை தற்காலிகமாக திட்டமிட்டுள்ளது. எனினும், கடன் கடிதங்களை திறப்பது குறித்து மின்சாரசபை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கிடையில் இன்னும் இழுபறி உள்ளது.
இதற்கிடையில், பிரச்சனை ஏற்பட அனுமதித்த பிறகு குறுகிய கால தீர்வு என, அதிக செலவான திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல், இப்பொழுதே நீண்டகால திட்டங்களை அமுல்ப்படுத்துமாறு மின்சாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம், அரசுக்கு முன்மொழிந்துள்ளது.
நெருக்கடியை சமாளிக்க அந்த சங்கம் பல உடனடி நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது. மின் உற்பத்திக்கான எரிபொருளைப் பாதுகாப்பதற்காக, வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் போக்குவரத்து எரிபொருளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அது குறிப்பிட்டுள்ளது.