மூன்று புதிய மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர், இது மிகவும் குறுகிய நோக்கத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானம் என கூறினார்.
இது பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிவாயு கசிவு வெடிப்புகள், விவசாயத்திற்கான அடிப்படை வசதிகள் இன்மை, வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி மற்றும் மேலும் கடன் சுமை போன்ற காரணங்களால் பொதுமக்கள் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவோ அல்லது தயாரிக்கவோ முடியாமல் கடும் சுமை மற்றும் நெருக்கடியை எதிர்நோக்குவதாக தேரர் கூறினார்.
மதுபான உற்பத்தியை அனுமதிப்பதன் மூலம் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என அரசாங்கம் நம்பினால், அது அரசாங்கத்தின் திறமையின்மையை நிரூபிப்பதாக சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
உலக சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் மதுபான பாவனை 55 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கையில் நிலைமை மிகவும் வித்தியாசமானது எனவும் மதுபான பாவனை 95 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் என தேரர் தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய்க்கு மத்தியில் COVID-19 மேலும் பரவுவதற்கு மது அருந்துவதும் வழிவகுத்தது என்று சோபித தேரர் கூறினார்.
எனவே மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையை குறைப்பதற்கான வழிகளை அரசாங்கம் ஆராய வேண்டும் எனவும், அதனை மேலும் ஊக்குவிக்கக் கூடாது எனவும் சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.