வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பையேற்றும் வாகனம் இன்று (24) அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இவ் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரின் கழிவுகளை நேற்று (23) இரவு ஏற்றிய பின்னர் நகரசபை வளாகத்தில் குப்பையேற்றும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை 2.00 மணி வரை ஊழியர்கள் நகரசபை வளாகத்தில் கடமையாற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நகரசபை ஊழியர் ஒருவர் காலை கடமைக்கு திரும்பிய சமயத்தில் குப்பையேற்றும் வாகனம் எரிந்து கொண்டிருந்தது. அதன் பின்னர் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் வாகனம் பகுதியளவில் மாத்திரமே சேதமடைந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சிசீரீவி உதவியுடன் தீ விபத்திற்கான காரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.