இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகப்படியான தலையீடுகளை தாம் ஆட்சேபிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று 17 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தூதுவர்களை வரவேற்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை 30 வருடகால மோதல்கள் எச்சங்களை விட்டுச் சென்றுள்ளது. ஏனைய நாடுகள் மீட்சியடைய பல தசாப்தங்கள் எடுத்தன. எஞ்சிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக இலங்கை ஒவ்வொரு முயற்சியையும் முன்னெடுத்து வருகிறது. மோதல்களினால் எஞ்சிய பிரச்சினைகளை சமாளிப்பதில் காணாமல் போனோர் அலுவலகம், விசாரணை ஆணைக்குழுக்கள், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுக்கள் பணியாற்றுகின்றன.
மனித உரிமைகள் ஆணைக்குழுவானது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பெண் நீதியரசரால் தலைமை தாங்கப்படுகிறது. தீர்மானங்களை மேற்கொள்வதில் அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தை நோக்கி இலங்கை பணியாற்றுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை எப்பொழுதும் ஈடுபட்டுள்ளதுடன், தொடர்ந்தும் சுமுகமாக ஈடுபடவுள்ளது. எனினும், நாட்டின் உள்ளக விவகாரங்களிலான அதன் அதிகமான தலையீடுகளை எதிர்க்கிறோம். இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக தரவுகளை சேகரிக்க வேண்டும் என்பதே ஐ.நா. வின் ஒரே நோக்கமாதலால், அதனால் ‘விசேட வழிமுறை’ அமைக்கப்படுவதை எதிர்க்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் ஆதாரமாக அமையவில்லை என்றார்.