யாழ்ப்பாணம், நல்லூரடியில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்டுள்ளார்.
திருடிய தொலைபேசியின் ‘லொக் உடைக்க’ யாழ் நகரிலுள்ள தொலைபேசி திருத்தும் கடையொன்றிற்கு சென்ற போது சிக்கிக் கொண்டார்.
நல்லூரடியிலுள்ள வீடொன்றிலிருந்து தொலைபேசியொன்று திருடப்பட்டிருந்தது. வீட்டு யன்னல் ஊடாக தொலைபேசி திருடப்பட்டிருந்தது. தொலைபேசியின் பெறுமதி சுமார் 75,000 என கூறப்படுகிறது.
திருடிய தொலைபேசியை, யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பழைய தபால் நிலைய வீதியிலுள்ள தொலைபேசி திருத்தும் நிலையமொன்றில், ‘லொக் உடைத்து’ தருமாறு கொடுத்துள்ளார். குறிப்பிட்ட நேரம் கழித்து வருமாறு கடைக்காரர் அனுப்பி வைத்துள்ளனர்.
தொலைபேசி திருடப்பட்டதை தெரிந்ததும், உரிமையாளரான இளைஞன், அதன் இருப்பிடத்தை இணையத்தின் ஊடாக கண்டறிந்து, குறிப்பிட்ட கடைக்கு சென்றார்.
இருப்பிடத்தில் காண்பிக்கப்படும் விபரத்தை சுட்டிக்காட்டி, அந்த கடையில் தமது தொலைபேசி இருக்கும் விடயத்தை தெரிவித்தனர். அந்த இளைஞன் கொடுத்த கடவுச்சொல்லின் மூலம் தொலைபேசி வழமைக்கு திரும்பியது. இதனால், அவர்தான் உண்மையான உரிமையாளர் என்பது தெரிய வந்தது.
தொலைபேசி உரிமையாளராக இளைஞன், பொலிசாருக்கும் அறிவித்தார்.
அத்துடன், அவரும் நண்பர்களும் தொலைபேசியை மீள பெற வரும் திருடனை மடக்கிப் பிடிக்க, அந்த பகுதியில் நின்றிருந்தனர்.
சற்று நேரம் கழித்து, திருடன் தொலைபேசியை பெற அங்கு வந்துள்ளார்.
அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடிக்க, பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, திருடனை அள்ளிச் சென்றனர்.