ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு வயல் பிரதேசத்தில் தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கை கலப்பில்,, தாய் மாமன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு முள்ளிவட்டவான் விவசாய கண்டத்தில் உள்ள வயல் காணி தொடர்பாக சகோதரர் ஒருவருக்கும் அவரது சகோதரிக்கும் இடையில் தகராறு இடம்பெற்று வரும் சந்தர்ப்பத்தில், இன்று செவ்வாய்க்கிழமை சகோதரியின் மகனுக்கும் தாய் மாமனுக்கும் ஏற்பட்ட கைகலப்பே இந்த கொலைக்கான காரணம் என்று ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முள்ளிவட்டவான் விவசாய அமைப்பு தலைவர் ஐ.எல்.எம். முஸ்தபா கருத்து தெரிவிக்கையில்,
நானும் என்னுடன் மற்றுமொரு விவசாயியும் முச்சக்கர வண்டியில் வரும் போது, உசனார் பௌசான் என்பவர் ‘எனது மாமாவை வெட்டி விட்டேன். அவரை உங்கள் ஆட்டோவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்’ என்று தெரிவித்தார். அவருடன் நானும் என்னுடன் வந்தவர்களும் வந்து பார்த்த போது, பௌசான் தெரிவித்தார் ‘அவர் மரணித்து விட்டார். நீங்கள் அம்புலன்ஸ்சுக்கு அறிவியுங்கள்’ என்று சொல்லிவிட்டு சென்றார் என்று தெரிவித்தார்.
பாடசாலை சிற்றூழியரான 32 வயதான மருமகன், கொலை செய்த பின்னர் வாழைச்சேனை பொலிஸாஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.