ஐந்து மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மன்னார், திருகோணமலை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் பாதிக்கப்படும்.
எவ்வாறாயினும் வேலை நிறுத்தம் காரணமாக அவசர சேவைகள் பாதிக்கப்படாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இடமாறுதல் சபையின் அனுமதியின்றி பயிற்சிக்கு பின்னரான வைத்தியர்களை பணியமர்த்தியமைக்கு எதிராக தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனல் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
மன்னார், பொலன்னறுவை, திருகோணமலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் சுகாதாரத் துறையைப் பேணுவதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், இந்த விடயம் காரணமாக மிகவும் பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் தன்னிச்சையான நடவடிக்கைகள், தவறான நடைமுறைகள் மற்றும் இடமாற்ற சபையின் பரிந்துரைகளை புறக்கணித்தமை போன்ற காரணங்களால் இந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவர்களை நியமிப்பதில் கடைநிலையில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட அலுவலகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் வேலைநிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தவும் தயங்கப்போவதில்லை என டொக்ரர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இடைநிலை சிகிச்சை நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களைக் கையாளுவதற்கு வைத்தியர்கள் இருக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டாலும், பல இடைநிலை மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு வைத்தியர்கள் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண இடமாற்ற சபை உன்னிப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் செயலாளரின் தன்னிச்சையான தீர்மானங்களால், பொதுமக்கள் குறிப்பாக COVID-19 நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள் என டொக்ரர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார்.