யாழ்ப்பாணம், பரமேஸ்வரா சந்தியில் நேற்று (15) இளைஞன் ஒருவன் விரட்டி விரட்டி வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டி ரௌடிக்குழு தலைவனுடன் நட்பாக இருந்தார் என்பதனாலேயே, ஆவா குழு ரௌடிகள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டனர்.
நாயன்மார் கட்டை சேர்ந்த இளைஞன் ஒருவரே வாள்வெட்டிற்கு இலக்காகினார். வாள்வெட்டில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை 10.30 மணியளவில்- சனநடமாட்டம் அதிகமாக இருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது.
யாழ் நகர் பக்கமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞனை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு ரௌடிகள் வழிமறித்து வாளால் வெட்ட முயன்றனர். அந்த இளைஞன் பல்கலைகழக பக்கமாக தப்பியோட முயன்ற போதும் ரௌடிகள் விரட்டிச் சென்று வாளால் வெட்டினர்.
இதன்போது, இளைஞனின் கைகளில் சிறிய காயம் ஏற்பட்டது. வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபடும், 23 வயதான இளைஞனே காயமடைந்தார்.
ரௌடிகள் எச்சரிக்கும் நோக்கத்துடன் இந்த வாள்வெட்டில் ஈடுபட்டதாக கருதப்படுகிறது.
அரியாலையில் சந்திரன் என்ற உள்ளூர் “சண்டியன்“ இருக்கிறார். அவருடன் இந்த இளைஞன் நட்பாக இருந்துள்ளார்.
“சந்திரனுடன் இனி நாம் காணக்கூடாது. சந்திரனுடன் திரிந்தால் வெட்டி விடுவோம்“ என எச்சரித்தே, இன்று வாளால் வெட்டியுள்ளனர்..
இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வாள்வெட்டில் ஈடுபட்ட 4 ரௌடிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.