கொரோனா டெல்டா வைரஸை விட உருமாறிய ஒமைக்ரோன் 70 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது. ஆனால், நோய் பாதிப்பு குறைவே என்று ஹொங்கொங் பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
ஒமைக்ரோன் தொற்று ஏற்பட்ட 24 மணி நேரத்தில் அது நுரையீரலில் பரவி விடுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் மைக்கல் சேன் சி வாய் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஒமைக்ரோன் வேகமாகப் பரவி நுரையீரலுக்குள் சென்றாலும் கூட அது நுரையீரல் திசுக்களில் பாதிப்பு ஏற்படுத்துவது என்பது டெல்டாவை விட 10 மடங்கு குறைவு எனக் கண்டறிந்துள்ளனர்.
ஆகையால் ஒரு நபரிடம் இருந்து மற்றவருக்கு ஒமைக்ரோன் பரவும் வேகம் மற்ற உருமாறிய வைரஸ்களைவிட 70 மடங்கு அதிகம் என்றாலும் கூட அது நோய் பாதிப்பு ஏற்படுத்தும் தீவிரம் ஒப்பீட்டு அளவில் மிகக் குறைவு எனத் தெரிவித்துள்ளனர்.
ஒமைக்ரோன் வைரஸ் இப்போது 77 நாடுகளில் பரவி உள்ளது. தென்னாபிரிக்காவில் முதல் தொற்று கண்டறியப்பட்ட மூன்று வாரங்களில் 77 நாடுகளுக்குப் பரவி இருப்பது அதன் பரவும் தீவிரத்தைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், அதிகம் பரவும் இந்த புதிய உருமாறிய வைரஸ் மற்ற திரிபுகளை ஒடுக்கி கொரோனா பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்றும் அவர்கள் கணிக்கின்றனர். இனி கொரோனா இன்ஃப்ளுவன்சா வைரஸ் போல், மக்கள் வாழக்கற்றுக் கொள்ளும் வகையில் ஒரு நோய்க்கிருமியாகும் என்றும் அவர்கள் கணிக்கின்றனர்.