யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இன்று (15) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனின் ஆட்சியை கவிழ்க்கக்கூடாது என வடக்கு முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 கட்சிகளின் தலைமையையும் வி.மணிவண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். கூடுதலாக, எம்.ஏ.சுமந்திரனின் வீட்டிற்கும் சென்று சந்தித்து, ஆதரவு கோரியிருந்தார்.
எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளது. கூட்டமைப்பிடம் 16 உறுப்பினர்கள் உள்ளனர்.
யாழ் மாநகரசபையில் 45 உறுப்பினர்கள் உள்ளனர். வரவு செலவு திட்டத்தை வெல்ல அல்லது தோற்கடிக்க 23 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 11 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 8 பேர் மணிவண்ணன் தரப்பினர். 3 பேர் கஜேந்திரகுமார் தரப்பினர். அவர்கள் 3 பேரும் எதிர்த்து வாக்களிப்பார்கள்.
தற்போதைய நிலவரப்படி கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், முன்னணியின் 3 உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிப்பார்கள்.
ஈ.பி.டி.பி தரப்பில் 11 உறுப்பினர்களும், ஐ.தே.கவின் 3 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 2 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் தலா ஒவ்வொரு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.
வி.மணிவண்ணன் ஆட்சி அமைவதற்கு ஒரு வகையில் ஈ.பி.டி.பியின் தயவும் இருந்தது. எனினும், ஆட்சிக்கு வந்த பின்னர், மணிவண்ணன் தரப்பினர் தம்மை மதிக்கவில்லையென்ற அதிருப்தி ஈ.பி.டி.பிக்கு உள்ளது.
மணிவண்ணனை ஆதரிப்பதில் கடந்த முறையை போல, இம்முறை ஒத்த அபிப்பிராயம் ஈ.பி.டி.பிக்குள் இல்லை.
மணிவண்ணன் நகரை மையப்படுத்தி செற்பட்டு, தமது ஆதரவு தளத்தை மொத்தமாக வழித்து துடைத்து எடுக்கிறார் என, நகரப்பகுதியை சேர்ந்த முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவிற்கு அதிருப்தியுண்டு. மறுவளமாக மணிவண்ணன் பதவியிலிருப்பது தனக்கு சாதகமானது என ஈ.பி.டி.பியின் மு.ரெமீடியஸ் கருதுகிறார்.
அதற்கு காரணம்- மணிவண்ணன் தோற்கடிக்கப்பட்டால் கூட்டமைப்பு ஆட்சியை பிடிக்க வாய்ப்புண்டு. கூட்டமைப்பின் சார்பில்ஏற்கனவே முதல்வராக இருந்தவர் ஆனோல்ட். ரெமீடியசின் உறவினர். ஒரே பகுதியை சேர்ந்தவர்.
இந்த வரவு செலவு திட்டத்தில் மணிவண்ணன் தோல்வியடைந்து, கூட்டமைப்பின் சார்பில் ஒரு முதல்வர் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அந்த வேட்பாளராக நான் இருக்கவில்லையென, முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் கட்சிக்கு அறிவித்து விட்டார். அப்படியொரு நிலைமை வந்தால், சொலமன் சூசிறிலை வேட்பாளராக்குவதென கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இருவரில் யார் வந்தாலும், தனது பிரதேச அரசியலுக்கு சவால் என்பதால், இருக்கும் நிலைமை நீடிப்பதையே ரெமீடியஸ் விரும்புகிறார்.
இது இப்பொழுது ஈ.பி.டி.பிக்குள் குழப்பமான விடயம்.
ஆனால், ஏனைய கட்சிகளை போல ஈ.பி.டி.பி இரண்டு அணியாக பிரிந்து வாக்களிக்க வாய்ப்பில்லை. எந்த முடிவென்றாலும், அனைவரும் ஒன்றாக வாக்களிக்கவே சாத்தியமுண்டு.
சுதந்திரக்கட்சியின் ஒரு உறுப்பினரும் இப்பொழுது ஈ.பி.டி.பீலேயே அங்கம் வகிக்கிறார்.
ஈ.பி.டி.பி அனேகமாக மணிவண்ணனை ஆதரிக்கவே வாய்ப்புண்டு.
ஐ.தே.கவின் 3 பேரும், சுகாவின் மற்றையவரும், சுயேட்சைக்குழு உறுப்பினரும் எடுக்கும் முடிவிலேயே, வரவு செலவு திட்டம் தங்கியுள்ளது.
இதேவேளை, வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் மாநகரசபை கலையும், ஆணையாளரின் ஆட்சியே ஏற்படும் என தெரிவிக்கப்படுவது தவறான தகவல்.. அது குறித்த சட்ட ஏற்பாடுகள் பற்றியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நேற்றைய கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.