யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் மீது பெரும் குற்றச்சாட்டுக்களை சுமத்திய, யாழ் மாநரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கும் முடிவை கட்சி எடுக்கக்கூடாதென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வி.மணிவண்ணன் மீது பல்வேறு அதிர்ச்சிக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளனர்.
யாழ் மாநரகசபை வரவு செலவு திட்ட அமர்வு நாளை (15) இடம்பெறுகிறது. வரவு செலவு திட்டத்தில் என்ன முடிவெடுப்பது என்பதை ஆராய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கூடியது.
மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சார்பில் பா.கஜதீபன் ஆகியோரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து மாநகரசபை உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றிய மாவை சேனாதிராசா, நேற்று தன்னையும், எம்.ஏ.சுமந்திரனையும் நேரில் சந்தித்து, வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டுமென வி.மணிவண்ணன் கேட்டுக் கொண்டதை சுட்டிக்காட்டினார்.
பா.கஜதீபன் கருத்து தெரிவித்த போது, மாநகரசபை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படும் என்ற உத்தரவாதம் இதுவரை கிடையாது. இன்னும் 3 மாதங்களில் சபை கலைந்து விடும். இந்த நேரத்தில் மாநகரசபை நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன முடிவெடுக்கிறதோ அதை தமது கட்சியும் ஏற்றுக்கொள்ளும் என்றார்.
இதன்பின்னர் கருத்து தெரிவித்த மாநகரசபை உறுப்பினர்கள் வி.மணிவண்ணனின் நிர்வாகத்திற்கு எதிராக சரமாரியான குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.
வரவு செலவு திட்டம் கற்பனையில் தயாரிக்கப்பட்டுள்ளது, நிதி ஆதாரங்கள் இல்லாமல், அதிக வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது, நகர வர்த்தகர்களிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் உள்ளதென விலாவாரியாக விளக்கினார்கள்.
முக்கியமாக அனைத்து உறுப்பினர்களும் சுமத்திய குற்றச்சாட்டு- கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனேகர் வெற்றிபெற்ற வட்டார உறுப்பினர்களாக இருந்தாலும், தமது வட்டாரத்தில் பணிசெய்ய முடியவில்லை. மணிவண்ணன் தனது அணியிலுள்ள நியமன பட்டியல் உறுப்பினர்களின் மூலமே அந்த பகுதிகளில் பணியாற்றுகிறார்.
வட்டார உறுப்பினர்களின் நிதியை வெட்டி, தனது குள புனரமைப்பு திட்டமென விளம்பரப்படுத்துகிறார், 5ஜி திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியவர் இப்பொழுது அவரே அந்த திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளார், விளம்பர பலகை திட்டத்தை சபை அனுமதியின்றி நடத்துகிறார், இதன் நிதி பரிமாற்றங்கள் என்னவென்பது தெரியவில்லை, ஆரியகுளத்தில் மும்மத அடையாளங்களை ஏற்படுத்த ஆளுனர் இட்ட உத்தரவை நடைமுறைப்படுத்துகிறார், ஆரியகுளத்தின் பிரதான நுழைவாயிலை மாற்றி, விகாரை வீதிக்கு மாற்றவுள்ளார் என சரமாரியான குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.
வி.மணிவண்ணன் முதன்முறையாக மாநகரசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட போது, கூட்டமைப்பின் காலைவாரி, மணிவண்ணனை ஆதரித்தவர் அருள்குமரன் என்ற உறுப்பினர். சுமந்திரனின் பின்னணியில் அவர் மணிவண்ணனை ஆதரித்ததாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.
இன்று, அவரும் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென கருத்து கூறினார்.
இதன்போது, பா.கஜதீபன் மீண்டும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். ‘எதிர்த்து வாக்களிப்பதென இங்கு நீங்கள் முடிவெடுத்து விட்டு, வாக்களிக்கும் இடத்தில் சிலர் கட்சியை காட்டிக்கொடுப்பதை போல மாறி வாக்களித்தால், உங்களிற்கும் பிரச்சனையிருக்காது. எங்களிற்கும் பிரச்சனையிருக்காது. ஆனால் அந்த பிரச்சனைகள் அனைத்தும் மாவை சேனாதிராசாவைத்தான் தாக்கும். ஆகவே, எந்த முடிவென்றாலும் இந்த இடத்தில் வெளிப்படையாக எடுங்கள்’ என்றார்.
அனைத்து உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதென அங்கு தீர்மானித்தனர்.