அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச சங்கமன்கண்டி படிமலையடி வாரத்தில் அதிகாலை வேளையில் இருட்டோடு இருட்டாக பௌத்த பிக்குகளினால் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பகுதியில் தமிழ் மக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் கொந்தளிப்பான நிலைமையேற்பட்டது.
அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலாளரின் நிர்வாக எல்லைக்குட்பட்ட தாண்டியடி சங்கமன்கண்டி படிமலை அடிவாரத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் பெளத்த பிக்குகளினால் சட்டவிரோதமாக புத்தர் நிலையொன்று கொண்டு வந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை இருட்டோடு இருட்டாக புத்தர் சிலை வைக்கப்பட்டது.
பொத்துவில் மூகுது மஹா விகாராதிபதி தலைமையில் சுமார் 10 பிக்குகள், சிங்கள பொதுமக்கள் கொண்ட குழுவினர் புத்தர் சிலையை வைத்தனர்.
விடிந்ததும் தகவலறிந்த தாண்டியடி மற்றும் சங்கமன்கண்டி கிராம தமிழ் மக்கள் அணிதிரண்டு புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புத்தர் சிலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
காரைதீவு, பொத்துவில், திருக்கோவில் பிரதேசசபைகளின் தவிசாளர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மக்கள் பிரதிநிதிகள் யிடம் புத்தர் சிலையை அகற்றுமாறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டபோதும் பௌத்த பிக்கு அதற்கு உடன்படவில்லை.
இதனையடுத்து காரைதீவு தவிசாளர் கே.ஜெயசிறீல், திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் பொத்துவில் தவிசாளர் ஏ.ரஹீம், உதவி தவிசாளர் பார்த்தீபன் உட்பட பல பிரமுகர்களும் மற்றும் கிராம மக்களும் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.
சம்பவம் தொடர்பில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் க.ஜெயசிறில் தமிழ்பக்கத்திடம் கருத்து தெரிவித்த போது,
‘இன்று அதிகாலை 4 மணியளவில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அங்குள்ள மயானத்திற்கு அருகில் ஏற்கனவே இரண்டு முறை புத்தர் சிலை வைக்க முயற்சிக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டது.
இன்று புத்தர் சிலை வைக்கப்பட்ட தகவலை பிரதேச மக்கள் வழங்கியதையடுத்து நான், பொத்துவில், திருக்கோவில் பிரதேசசபைகளின் தவிசாளர்களும் அங்கு சென்றோம்.
விகாராதிபதியிடம் சென்று, ஏன் இவ்வாறு அடாவடியாக நடக்கிறீர்கள்? தமிழ், சிங்கள மக்கள் ஒரளவு இணக்கப்பாட்டுடன் வாழும் இந்த பகுதியில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள். ஒரேநாடு ஒரே சட்டம் என அரசாங்கம் செயலணியை பிக்கு தலைமையில் அமைத்துள்ள நிலையில், நீங்கள் இப்படி செயற்படுகிறீர்கள். புத்தபிரானின் போதனையை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு இப்படி அடாவடித்தனத்தில் ஈடுபட முடியாது. சிலையை அகற்றுங்கள் என்றேன்.
2500 வருடங்களின் முன் இங்கு பன்சாலை இருந்தது. இது எமது அடையாளம். இங்கு புத்தர் சிலை வைப்பது எமது உரிமை. இது பௌத்த நாடு. இங்கு நீங்கள் கேள்விகேட்ட உங்களிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. அனுமதி பெற்றே சிலையை வைத்தோம் என்றார்.
யாரிடம் அனுதி பெற்று வைத்தீர்கள் என கேட்டேன். அந்த அனுமதியை அவர்கள் காண்பிக்கவில்லை.
பிரதேச செயலாளர் வந்து பௌத்த பிக்குகளுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தினார். பிக்குகளை அங்கிருந்து வெளியேறும்படி பிரதேச செயலாளர் அறிவுறுத்தியதையடுத்து, பிக்குகள் வெளியேறினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் கலைந்து செல்லுமாறு கூறிய பிரதேச செயலாளர், 2 நாட்களில் இதற்கான முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.
தற்போது, புத்தர் சிலைக்கு பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது.
பொலிசாரும் பிக்குகளிற்கு சாதகமாக செயற்பட்டனர். மத குருமாருக்கு எதிராக தம்மால் செயற்பட முடியாதென அவர்கள் தெரிவித்தனர். சைவ மதகுரு ஒருவர் பிள்ளையார் சிலையுடன் சென்று, சிங்கள பகுதியில் நிறுவினால் என்ன செய்வீர்கள் என கேட்டேன்’ என்றார்.