என்றும் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் தலைவரை அவமானப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறிய கருத்துக்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என கரைச்சி பிரதேச சபையின் சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களான இ.மயில்வாகனம் மற்றும் க.லோறன்ஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போதைப் பொருள் கடத்தினார், என்றும் அவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்டார் என்றும் பாராளுமன்றத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் பேசியிருந்தார்.
இவரது இக் கருத்தை நாம் எமது கட்சி சார்ந்து வன்மையாக கண்டிக்கின்றோம். இனத்தின் விடுதலைக்காக தான் வரித்துகொண்ட கொள்கைக்காக தன்னேயே அர்ப்பணித்தவர் தலைவர் பிரபாகரன். அவ்வாறான ஒருவரை தன்னுடைய அரசியலுக்காக அவமானப்படுத்துவதனை ஒரு போதும ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்களுடைய தலைவர் யார் என தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுது கேட்டாலும் அவர்கள் கூறுவது அந்த ஒரு பெயரை மாத்திரமே. எனவே அவ்வாறன ஒருவரை அவமானப்படுத்துவதனை தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.
இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்தை தாமும் ஏக மனதாக ஏற்றுக்கொள்கிறோம் என்றனர்.