பம்பலப்பிட்டி லோரன்ஸ் மாவத்தையில் விழா மண்டபம் ஒன்றிற்கு அருகில் நேற்று (9) வர்த்தகர் ஒருவரை காரில் கடத்திச் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர், காரில் இருந்த 500,000 ரூபா பெறுமதியான நகைகளையும் 30,000 ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் வசிக்கும் குறித்த நபர், திருமண நிகழ்விற்காக மனைவியுடன் வந்து, தனது காரை தரிப்பிடத்தில் நிறுத்தவிருந்த வேளையில் கைவிலங்கிடப்பட்டு கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரை காரில் அழைத்துச் சென்ற கொள்ளையன், அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையிட்டுள்ளான். எனினும், அது போதாது என்பதால் மனைவியை மண்டபத்திற்கு வெளியில் வருமாறு அழைக்குமாறு மிரட்டியுள்ளான்.
விபரீதத்தை உணர்ந்த வர்த்தகர், தனத மனைவிக்கு அழைப்பேற்படுத்தி தமிழில் உரையாடியுள்ளார். தனது நிலைமையை குறிப்பிட்டு, மண்டபத்திற்கு வெளியில் வர வேண்டாமென கூறியுள்ளார்.
இதையடுத்து, மனைவி பம்பலப்பிட்டி பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
வரத்தகரின் ஏரிஎம் அட்டையை பயன்படுத்தி, தனியார் வங்கியில் இருந்து 30,000 ரூபா பணமும் பெறப்பட்டது.
பொலிசார் மண்டபத்திற்கு சென்றுள்ளனர். வர்த்தகருடன் திரும்பி வந்த கொள்ளையன் பொலிசாரை கண்டதும், காரிலிருந்து இறங்கி தப்பியோடி விட்டான்.
வர்த்தகரின் 3 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் திருடியுள்ளான்.
பொலிசார் மேற்கொண்ட சோதனையில், கொள்ளையன் செலுத்தி வந்ததாக கருதப்படும் மோட்டார் சைக்கிளொன்றும் அங்கிருந்து மீட்கப்பட்டது. பதிவு இலக்கத்தை ஆராய்ந்த போது அது கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடையது எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.