உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரோன் தீவிர நோய் பாதிப்பை உண்டாக்கவில்லை. மேலும், ஒமைக்ரோன் வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பை முழுமையாக உடைக்கும் சக்தி கொண்டதாகவும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மருத்துவர் மைக்கல் ரயான்.
அவர் அளித்த பேட்டியில், “ஒமைக்ரோன் பற்றி இன்னும் ஆழமாக அறிய வேண்டியது உள்ளது. ஆனால், இதுவரை கிடைத்த முதற்கட்ட தகவலின்படி பார்க்கும்போது ஒமைக்ரோன் வைரஸ் டெல்டா உள்ளிட்ட மற்ற திரிபுகளைப் போல் மக்களை தீவிர நோய்க்குத் தள்ளவில்லை. முதற்கட்டத் தகவல்கள் ஒமைக்ரோன் தீவிர பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதை உறுதி செய்யவில்லை.
இருந்தாலும் இது ஆரம்ப காலம் தான் என்பதால் நாம் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒமைக்ரோன் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அதேபோல், ஒமைக்ரோன் வைரஸால் தடுப்பூசிகள் அளிக்கும் பாதுகாப்பை முழுமையாக ஓரங்கட்டிவிடும் என்பதும் உறுதியாகவில்லை. இப்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் இதுவரை உருவான அனைத்து வகை உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்கொள்வதில் திறன் கொண்டதாக உள்ளது. தடுப்பூசிகளால் தீவிர நோய்த் தொற்று, மருத்துவமனை சிகிச்சைக்கான அவசியம் ஆகியன குறைந்துள்ளது.
ஒமைக்ரோனின் ஸ்பைக் புரதத்தில் மட்டுமே 30 வகையான உருமாற்றங்கள் இருப்பதால், இப்போதுள்ள தடுப்பூசிகள் அத்தனையையும் எதிர்க்கின்றனவா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் நிச்சயமாக தடுப்பூசியை முழுமையாக பலனற்றதாக ஒமைக்ரோனால் செய்ய இயலாது என்றே தெரிகிறது.
எப்போதெல்லாம் புதிதாக ஒரு திரிபு உருவாகிறதோ அப்போதெல்லாம் அது முந்தைய திரிபுடன் போட்டியிட்டு அதிகமாக பரவ முற்படும். தென்னாபிரிக்காவில் டெல்டாவின் தாக்கம் சொற்பமாகக் குறைந்துவிட்ட நிலையில். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி ஒமைக்ரோன் பரவுகிறது. அதேபோல், ஒமைக்ரோன் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் அதிகமாக தாக்குகிறது என்பதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.
எதுவாக இருந்தாலும், கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள இப்போதைக்கு ஒரே ஒரு பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. முகக்கவசம், சமூக இடைவெளியும் அவசியம். கொரோனா வைரஸ் அதன் தன்மையை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. அதன் வீரியத்தில் மாற்றம் இருக்கிறதே தவிர தன்மையில் மாற்றமில்லை. அதனால், இன்னும் ஆட்டம் முடியவில்லை” என்று கூறினார்.
தென்னாபிரிக்காவில் முதல் ஒமைக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இதுவரை அந்த வகை வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவிவிட்டது.