இந்தியாவில் உயர்மட்ட சந்திப்புக்களில் கலந்து கொள்ள வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பினர் அடுத்த வாரம் புதுடில்லி பயணமாகிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினரை, பேச்சுவார்த்தைக்காகஅடுத்த வாரம் புதுடில்லி வருமாறு இந்திய அரசு அழைத்துள்ளது என்பதை தமிழ்பக்கம் அறிந்தது.
இலங்கை தமிழ் அரசுகட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இந்த தகவலை உறுதி செய்தார்.
மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவை அடுத்த வார தொடக்கத்தில் இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 3 நாட்கள் தங்கியிருந்த பின்னர், அடுத்த வார இறுதியில் இந்த குழு இலங்கை திரும்புகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்கு வாய்ப்பேற்படுத்தி தருமாறு கடந்த சில வருடங்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், புதுடில்லி அரசு காதும் காதும் வைத்ததை போல மிக இரகசியமாக இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்தியா பயணமாகிறார்கள்.
இந்த பயணத்தில் மாவை சேனாதிராசாவும் செல்லவிருந்தாலும், தனிப்பட்ட காரணங்களினால் குறிப்பிட்ட திகதிகளில் அவரால் இந்தியா செல்ல முடியவில்லையென அந்த பிரமுகர் குறிப்பிட்டார்.
இந்த பயண ஏற்பாடுகளை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வதிவிடத்திற்கு சென்ற இந்திய தூதர் கோபால் பாக்ளே பேச்சு நடத்தினார்.
அனேகமாக ஓரிரண்டு நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு இந்தியா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.