மேற்கு கனடாவில் உள்ள ஒரு பகுதி குளிர்கால வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. இது காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய கவலையை அதிகரிக்க செய்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பென்ட்டிக்டன் (Penticton) நகரில் கடந்த 1ஆம் திகதி, வெப்பநிலை 22.5 டிகிரி செல்சியஸை எட்டியது.
இதற்கு முன்னதாக, டிசம்பர் 3, 1982 அன்று தென்கிழக்கு நகரமான ஹாமில்டன், ஒன்டாரியோவில் கனடாவில் குளிர்காலத்தின்போது மிக அதிகமான வெப்பநிலை பதிவானது. அப்போதும் குளிர்காலத்தின் உச்ச வெப்பநிலை 22.5 டிகிரி செல்சியஸை எட்டியது.
கனத்த மழை காரணமாக சென்ற மாதம் நடுப்பகுதியிலிருந்து கனடா வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது.
அதிக வெப்பம், வெள்ளம் ஆகியவை பருவநிலை மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பென்டிக்டன் லிட்டனுக்கு தென்கிழக்கே சில நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வான்கூவரில் இருந்து வடகிழக்கே 250 கிலோமீட்டர்கள் (155 மைல்) தொலைவில் அமைந்துள்ள லிட்டன், கோடையில் 49.6 டிகிரி செல்சியஸ் என்ற புதிய கனடிய வெப்பப் பதிவை அமைத்ததற்காக சர்வதேச கவனத்தைப் பெற்றது.
குளிர்கால வெப்பம் வடமேற்கு அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளது. கடந்த புதன்கிழமை, அங்கு வாஷிங்டன், மொன்டானா, வயோமிங் மற்றும் வடக்கு டகோட்டா மாநிலங்கள் முந்தைய சாதனைகளை சமன் செய்தன அல்லது அவற்றை நெருங்கின.
வெப்பநிலை இயல்பை விட 35 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருந்தது.
கலிஃபோர்னியாவில் உள்ள அதிகாரிகள், தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு அலையையும் சாத்தியமான இறப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகைப்படுத்தும் வெப்ப அலை எச்சரிக்கை முறையை அடுத்த ஆண்டு செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.
சில வெப்ப அலைகளுக்கு காலநிலை மாற்றம் நேரடியாகக் காரணம் என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.