இளம்வயதில் கைகூடாமல் போன காதலுக்காக வேறொரு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த முதியவர், 65 வயதில் தன் காதலியையே கரம்பிடித்த நிகழ்வு கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள தேவாரமுத்தனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான சிக்கண்ணா. 35 வருடங்களின் முன்னர் இவரும், ஜெயம்மா என்பவரும் இளமைக் காலத்தில் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
இரு வீட்டாரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்தாலும், கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வரும் சிக்கண்ணாவுக்கு தங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது என்பதில் ஜெயம்மாவின் பெற்றோர் பிடிவாதமாக இருந்தனர்.
சிக்கண்ணா, காதலி தன்னை விட்டு பிரிந்த விரக்தியில் மைசூர் அருகே உள்ள மேட்டகல்லி என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்து கூலி வேலை செய்து வந்தார். ஜெயம்மா மீது கொண்ட தீராத காதலால் யாரையுமே திருமணம் செய்து கொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தார்.
அதன் பின்னர் அவர்கள் சந்திக்கவில்லை என்றாலும், சிக்கண்ணா ஜெயம்மாவின் இருப்பிடம் மற்றும் அவரது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை பரஸ்பர நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து கேட்டறிந்து கொள்வார்.
ஜெயம்மாவும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். பல ஆண்டுகளாக நீடித்த மனக்கசப்பு காரணமாக, அவரது கணவர் அவரை விட்டு பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் ஜெயம்மா தனது மகனுடன் வாழ மைசூர் சென்றார்.
ஜெயம்மாவின் வாழ்க்கையில் நடந்த இந்த மாற்றத்தை பற்றி அறிந்ததும், சிக்கண்ணா தொடர்பு கொள்ள முடிவு செய்தார். இந்த ஜோடி நீண்ட காலமாக இழந்த காதலை மீண்டும் புதுப்பித்து, திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
முதுமை காலத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கலாம் எனக் கூறி ஜெயம்மாளும் திருமணத்திற்கு சம்மதிக்கவே, மேல்கோட்டை ஶ்ரீ செலுவ நாராயணசுவாமி கோயிலில் பாரம்பரிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சிக்கண்ணாவின் உறவினர்கள் 4 பேர் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜெயம்மாவின் மகனுக்கு 25 வயது, மைசூரில் உள்ள அரசுப் போக்குவரத்துத் துறையில் பணிபுரிகிறார். சிக்கண்ணா, ஜெயம்மா ஜோடி திருமண தகவல்களை பகிரங்கப்படுத்தாமலிருக்க விரும்பினர். “அடுத்த வருடம் எங்கள் மகனுக்கு திருமணம் நடக்கும். அதன் பிறகு எங்கள் உறவை வெளிப்படுத்துவோம்” என்றார் சிக்கண்ணா. அவர் ஏற்கனவே ஜெயம்மாவின் மகனை தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.
ஆனால் திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விட்டது.