விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மகான்’. லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்துக்குப் பிறகு விக்ரம் யாருடைய இயக்கத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். இந்நிலையில் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். விக்ரமின் 61வது திரைப்படமான இதனை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளன.
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அடுத்ததாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது விக்ரம் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் இயக்குவது உறுதியாகியுள்ளது.
Super excited to get this started🌸✨😍 மகிழ்ச்சி 🎉🎉🎉 #ChiyaanVikram @StudioGreen2 pic.twitter.com/iMo7QSGuaq
— pa.ranjith (@beemji) December 2, 2021