மாநாடு படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாநாடு. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இதனைப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதுகுறித்து சுரேஷ் காமாட்சி கூறியுள்ளதாவது:
”இனிய நாளாக அமைந்துவிட்டது இந்நாள். சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. நல்லதைத் தேடிப் பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது. மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்தப் படக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சார்”.
இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.