தேசிய விருதைத் தொடர்ந்து ‘பிரிக்ஸ்’ திரைப்பட விழாவில் தனுஷுக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ‘அசுரன்’ படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் தனுஷ். இப்படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேசத் திரைப்பட விழாவில் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவா சர்வதேசத் திரைப்பட விழாவுடன் முதன்முறையாக ‘பிரிக்ஸ்’ 6வது திரைப்பட விழாவும் நடைபெற்றது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் படங்கள் திரையிடப்பட்டன.
இந்த விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ‘அசுரன்’ படத்துக்காக தனுஷுக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.