ஓமைக்ரோன் வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாபிரிக்காவில் புதிய வகை கொரோனா வேற்றுருவம் (Variant) கண்டறியப்பட்டுள்ளது. ஓமைக்ரோன் (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு (Mutation) ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
.* ஓமைக்ரோன் வகை வைரஸ், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மீண்டும் எளிதாக தொற்றை ஏற்படுத்தக் கூடும் என்பது முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
* டெல்டா திரிபுடன் ஒப்படுகையில் ஓமைக்ரோன், ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டதா என்பது இன்னும் துல்லியமாகப் புலப்படவில்லை. இப்போதைக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மூலம் ஓமைக்ரோன் பரவலின் தன்மையைக் கண்காணிக்க முடியும்.
* தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா ஓமைக்ரோன் என்பது குறித்து தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* இப்போதைக்கு ஓமைக்ரோன் வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு மற்ற திரிபுகளை விட வித்தியாசமானது, மோசமானது என்பதை நிரூபிக்க போதிய தரவுகள் இல்லை.
* தென்னாபிரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இதனை நாம் நேரடியாக ஓமைக்ரோனின் வீரியம் என்று கூறிவிட முடியாது. அங்கு சமீப நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால் கூட மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளுக்குப் பரிந்துரை:
ஓமைக்ரோன் வைரஸ், கவனிக்கப்பட வேண்டிய உருமாற்றமாக இருப்பதால், உலக சுகாதார அமைப்பு சர்வதேச நாடுகள் தேவையான கண்காணிப்பு உத்திகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா பரிசோதனையின் போது மரபணு வரிசைமுறை எனப்படும் ஜீனோம் சீக்வென்சிங் மூலம் வைரஸின் உருமாற்றங்களைக் கண்டறிந்து அது குறித்தத் தகவல்களை GISAID போன்ற தளங்களில் பகிர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஓமைக்ரோன் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறியலாம் என அந்த அமைப்பு கூறியுள்ளது.