எரிவாயுவிலும் கலப்படம் செய்ய அனுமதி வழங்கியவர்கள் கைது செய்யப்படுவார்களா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிக்கையில்,
இந்த மாதத்தில் மாத்திரம் நான்கு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புக்குள்ளான சம்பவம் பதிவாகியுள்ளது. எரிவாயு சிலிண்டரின் கலவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவே வெடிப்புக்கு காரணம் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஸான் குணரத்ன தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.
அதுபோல் அவரின் கூற்றை உறுதி செய்யும் விதமாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை அமைந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக எமது சக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் பாராளுமன்றத்தில் எச்சரித்திருந்தார்.
தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் எரிவாயு எனும் பெயரில் அரசாங்கம் வெடிகுண்டு விற்பனை செய்ய அனுமதித்துள்ளதா எனற கேள்வியும் எழுகிறது.
இந்த எரிவாயு நிறுவனங்களுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதா? குற்றம் சாட்டுவது போன்று கலப்படம் நடைபெற்றுள்ளதா?அவ்வாறு நடைபெற்றால் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்களா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
குண்டுவெடிப்பில் அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த இந்த அரசின் சாபம் இன்று மக்களின் வீடுகள் வெடிக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.