இராணுவ, பொலிஸ் தடைகளை உடைத்து வல்வெட்டித்துறையில் மாவீரர் நினைவஞ்சலி இடம்பெற்றது.
தமிழர் தாயக பகுதியில் இம்முறை இடம்பெற்ற மிகப்பெரிய அஞ்சலி நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்தது.
நூற்றுக்கணக்கான படையினர், பொலிசார் குவிக்கப்பட்டு, போர்க்களம் போல காட்சியளித்த பிரதேசத்தில், அஞ்சலியில் கலந்து கொண்டவர்கள் மீது மிகப்பெரிய அச்சுறுத்தல், தடை பிரயோகிக்கப்பட்டது.
எனினும், நூற்றுக்கணக்கில் திரண்ட மக்களின் உணர்வு பெருக்கு, அந்த தடைகளை உடைத்தெறிந்தது.
வல்வெட்டித்துறை, தீருவில் வெளியில் இந்த அஞ்சலி நிகழ்வு நடந்தது.
தீருவிலில் அஞ்சலி நிகழ்வை தடுக்க பாதுகாப்பு தரப்பு பகீரத பிரயத்தனம்பட்டது. நேற்று பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பொலிசார் இந்த அஞ்சலி நிகழ்வை தடுக்க கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். எனினும், நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
இன்று, தீருவில் மைதானத்தை சுற்றி நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, யாரும் உள்நுழைய முடியாதவாறு தடையேற்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்கள் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் ஒன்றுகூடினர். அங்கும் பொலிசாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
தீருவிலை நோக்கி வெளியிடங்களிலிருந்து சென்றவர்கள் வழிமறிக்கப்பட்டனர். வீதிகளில் பவள் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். வீதியெல்லாம் படையினர் குவிக்கப்பட்டு, அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.
ரேவடி கடற்கரையிலிருந்து தீருவிலை நோக்கி கால்நடையாக மக்கள் சென்றனர். பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, நினைவஞ்சலியை கைவிடுமாறு எம்.கே.சிவாஜிலிங்கத்தை வலியுறுத்தினர்.
அத்துடன், ரேவடி கடற்கரையில் நினைவஞ்சலி மேற்கொள்ள முடியாதென கூறினர். அங்கு நினைவஞ்சலி மேற்கொள்ளவில்லை, வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் ஒன்றுகூடி செல்லுமிடமென சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
பின்னர் தீருவிலுக்கு மக்கள் கால்நடையாக சென்றனர். அவர்களை இராணுவத்தினர் பின்தொடர்ந்தவர். வீதித்தடைகளை ஏற்படுத்தி மக்களை தடுக்க இராணுவம் முயன்ற போதும், குச்சொழுங்கைகள், மாற்று பாதைகளால் மக்கள் நடந்து தீருவிலை அடைந்தனர்.
தீருவிலுக்குள் நுழைவதற்கு ஆரம்பத்தில் இராணுவம் தடையேற்படுத்திய போதும், முதல் தொகுதியினர் மைதானத்திற்குள் நுழைந்து விட்டனர்.
மீண்டும் வாயிலை இராணுவம் அடைத்தது.
மைதானத்திற்குள்ளும் பதற்றம் தொடர்ந்தது. தீப்பந்தங்கள், தேங்காயெண்ணெய் விளக்குகள் அனுமதிக்கப்படவில்லை. முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தரப்பினர் கொண்டு சென்ற பந்தங்களை இராணுவத்தினர் இழுத்து பறித்தனர்.
வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் நுழையவும் இராணுவம் தடையேற்படுத்தியது. பெரும் தர்க்கத்தின் பின் அவர்கள் உள்நுழைந்தனர்.
மைதானத்திற்குள் தீப்பந்தம் ஏற்ற அனுமதிக்கப்படாததையடுத்து, பொதுச்சுடரை ஏற்ற அனந்தி சசிதரன் தான் அணிந்திருந்த சேலையின் ஒரு பகுதியை கிழித்து, விளக்கேற்ற கொடுத்தார்.
மைதானத்திற்கு வெளியில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
6.05 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது.
அதை தொடர்ந்து, 10, 10 பேராக உள்ளே அனுமதிக்க முடியுமென இராணுவம் குறிப்பிட்டது.
வெளியே குவிந்திருந்த மக்கள் மதில் சுவரில் தீபங்களை ஏற்றினர். சிவிலுடையில் நின்ற இராணுவ புலனாய்வாளர்கள் அவற்றை தட்டிவிழுத்தி அநாகரிகமாக செயற்பட்டனர்.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், பொ.ஐங்கரநேசன், அனந்தி சசிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஷ் உள்ளிட்ட அரசியல் தரப்பினர் இதில் கலந்து கொண்டனர்.