கிண்ணியா படகு விபத்திற்கு காரணமான யாரும் தப்பிக்க முடியாதென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
.கிண்ணியா தள வைத்தியசாலைக்கு இன்று (25) குறிஞ்சாக்கேணி அனர்த்தத்தில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை பார்ப்பதற்காக கிண்ணியா வைத்தியசாலைக்கு சென்ற போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,
“இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்ட வேண்டிய நேரம் இதுவல்ல. போருக்குப் பின்னர், இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பாலங்கள் கிழக்கு மாகாணத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்தே நிர்மாணிக்கப்பட்ட தாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் மிக நீளமான பாலம் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. இந்த இடத்தில் பாலம் கட்டும் பணி கோவிட் தொற்று காரணமாக வேலைகள் நிறுத்தப்பட்டதால் தாமதமானது. மாற்று வழி இருந்தபோதிலும், மக்கள் அதை பயன்படுத்த விரும்பவில்லை.
இந்த சம்பவத்தை நாங்கள் இப்போது விசாரித்து வருகிறோம். இன்று பிற்பகலில் அறிக்கை பெறப்படும். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். பொறுப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது. எனினும் தற்போது இவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் கடற்படையினரால் வழங்கப்பட்டு வருகின்றது.
-திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்-