இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும், அவ் அமைப்பின் கொடிகள், அடையாளங்களை பிரதிநிதித்துவம் செய்யாது இறந்தவர்களை நினைவு கூர முடியும். தடைசெய்யப்பட்ட இயக்கத்தினுடைய நிகழ்வு ஒன்றாக நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ளாது இறந்தவர்களுக்கு பொதுவான நினைவு கூரல்களை மேற்கொள்ள முடியும் என மாவீரர் நாள் தடைக்கட்டளையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்றையநாள் (25) திருத்திய கட்டளையை ஆக்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 17 மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 07 பொலிஸ் பிரிவுகளில் மாவீரர் நாளை நினைவு கூர வழங்கப்பட்டிருந்த மாவீரர் நாள் தடையுத்தரவுக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன் குகனேசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் முல்லை ஈசன் ஆகியோர் சார்பாக இன்றையதினம் சட்டதரணிகள் குழாம் மூலம் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த திருத்திய கட்டளையை ஆக்கி உத்தரவிட்டுள்ளார் .
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், குகனேசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் முல்லை ஈசன் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையம், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம், மல்லாவி ,ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய 5 பொலிஸ் நிலையங்களால் பிரதிவாதிகாளாக பெயரிடப்பட்டு தமது பொலிஸ் பிரிவில் மாவீரர்நாள் நினைவு நிகழ்வை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது .
இந்த ஐந்து பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடையுத்தரவை திருத்திய கட்டளை ஆக்கி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணிகள் கணபதிப்பிள்ளை கணேஸ்வரன், கேசவன் சயந்தன், வி.எஸ்.எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நிதியானந்தராஜா ஆகியோர் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைத்து வாதங்களை மேற்கொண்டனர் .
வாதங்களை கேட்ட மன்று ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடையுத்தரவை திருத்தியகட்டளை ஆக்கியுள்ளது.