2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று (23) ஆரம்பமாகவுள்ளது.
குழுநிலை விவாதம் டிசம்பர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை 16 நாட்களுக்கு தொடரும்.
மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு 10ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 153 பேரும் எதிராக 60 பேரும் வாக்களித்தனர்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக ஆளும் கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எம்.பிக்கள் கட்சி முடிவை மீறியும் வாக்களித்த அதேவேளை, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு எதிராக வாக்களித்தன.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நவம்பர் மாதம் 12ஆம் திகதி சமர்ப்பித்த அதேவேளை, இரண்டாம் வாசிப்பு விவாதம் நேற்று வரை நீடித்தது.
ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் பல அரச அமைப்புகளின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.