கிசுகிசு கூடாது, ஹீரோ ஒர்ஷிப்பும் கூடாது என சீனா கெடுபிடி விதித்துள்ளது. ஏற்கெனவே, சீனா குழந்தைகளுக்கு ஒன்லைன் கேம் விளையாடுவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி ஒரு வாரத்தில் வெறும் 3 மணி நேரம் தான் குழந்தைகள் ஒன்லைனில் கேம் விளையாடுவதற்கு செலவழிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இப்போது அந்நாட்டில் சினிமா, பொப் பிரபலங்கள் மீதான மோகம் இளைஞர்களுக்கு அதிகரித்து வருவதால், திரைப் பிரபலங்கள் பற்றி கிசுகிசு கூடாது, ஹீரோ ஒர்ஷிப்பும் கூடாது என சீனா கெடுபிடி விதித்துள்ளது.
சீனாவின் சைபர் ஸ்பேஸ் ஒழுங்குமுறை ஆணையமானது, நாட்டில் ஆரோக்கியமான இணையச் சூழல் உருவாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன்படி கிசுகிசுப் பேச்சுகள், ஹீரோ ஒர்ஷிப் ஆகியனவற்றை இணையத்தில் கண்காணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.
ஒன்லைன் ரசிகர்கள் மன்றம் அமைக்கப்பட்டாலும் அதனை அதிகாரிகள் உரிய வகையில் கண்காணிக்க வேண்டும். ரசிகர்கள் தங்களின் ஸ்டார்களுக்காக மேற்கொள்ளும் செலவுகளும் கண்காணிக்கப்படும். நாட்டில் புதுவிதமான ஃபேன் கலாச்சாரம் உருவாகிறது. இது அபாயகரமானது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கனடா சீனா பொப் ஸ்டாரான க்றிஸ் வூ பீஜிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பாலியல் அத்துமீறலுக்காக அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஆதரவாக சீன சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையொட்டியே கிசுகிசு கூடாது, ஹீரோ ஒர்ஷிப்பும் கூடாது என சீனா கெடுபிடி விதித்துள்ளது.