ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களத்தின் உதவிப் பொதுச் செயலாளர் காலித் கியாக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (23) இடம்பெற்றது.
இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
காலித் கியாரியுடன், இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கரும் சந்திப்பில் கலந்து கொண்டார்.
சுமார் 1 மணித்தியாலம் இந்த சந்திப்பு நீடித்தது.
13வது திருத்தத்தை மேலும் பலப்படுத்துவது, புதிய அரசியலமைப்பு, ஒரேநாடு ஒரேசட்ட செயலணி குறித்து, கூட்டமைப்பின் அபிப்பிராயங்களை காலித் கியாரி கேட்டறிந்து கொண்டார்.
புதிய அரசியலமைப்பை கோட்டா அரசு உருவாக்குமென்ற நம்பிக்கை தமக்கில்லாத போதும், அதற்கு தொடர்ந்து முயற்சிசெய்து வருவதாக கூட்டமைப்பு தெரிவித்தது.
ஒரேநாடு ஒரே சட்டம் செயலணி, அதிதீவிர பௌத்த நிலைப்பாடுடைய சட்டங்களை உருவாக்க முன்னாயத்த நடவடிக்கையென்றும் சுட்டிக்காட்டினர்.
யுத்தம் முடிந்த பின்னரும், இராணுவத்திற்கு காணி சுவீகரிப்பு செய்வது, இனப்பரம்பலை குலைக்க அரசினால் திட்டமிடப்படும் நடவடிக்கையென்பதையும் சுட்டிக்காட்டினர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாமலுள்ளதை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, அவற்றை நிறைவேற்ற ஐ.நா ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டினர்.
காணி அபகரிப்பு, நினைவஞ்சரி உரிமை மறுப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றியும் கூட்டமைப்பு விளக்கியது.
இலங்கையில் நடக்கும் அனைத்து விவகாரங்களும் அன்றாடம் ஐ.நாவினால் அறியிப்பட்டு வருவதாகவும், கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய விவகாரங்கள் ஐ.நாவின் கவலைக்குரிய பட்டியலில் உள்ளதாகவும், காலித் கியாரி சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரங்கள் குறித்து அரச தரப்புடன் தான் பேச்சு நடத்துவேன் என்றும் தெரிவித்தார்.