கற்பனையில் வழக்கு தொடர முடியாது. இலங்கையில் உள்ள சட்டங்களிற்குட்பட்டு பணிகளை செய்யுங்கள் என, மாவீரர்தினத்திற்கு தடையுத்தரவு கோரிய பொலிசாருக்கு கண்டிப்பான அறிவுரை வழங்கியுள்ளார் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி.
மாவீரர்நாள் அனுட்டிப்பதற்கு குறிப்பிட்ட நபர்களிற்கு தடையுத்தரவு வழங்க வேண்டுமென சுன்னாகம், மல்லாகம், வட்டுக்கோட்டை, இளவாலை, மானிப்பாய் பொலிசார் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, மேற்படி அறிவுரையை வழங்கினார்.
மேற்படி பொலிஸ் நிலையங்களால் சுமார் 50 பேருக்கு எதிரான தடையுத்தரவு கோரப்பட்டிருந்தது. 8 இந்து ஆலயங்களிலும் மாவீரர்தின அனுட்டிப்பை நடத்த பொலிசார் கோரியிருந்தனர்.
தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், வலி தெற்கு, மேற்கு, தென்மேற்கு பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், ஆலய நிர்வாகத்தினர், சைவ பூசகர்கள் என சுமார் 50 பேர் வரையில் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
மேற்படி நபர்களிற்கு மாவீரர்நாள் அனுட்டிக்க தடையுத்தரவு வழங்க வேண்டுமென பொலிசார் கேட்டுக் கொண்டனர்.
‘ஒருவர் ஒரு குற்றத்தை செய்யாத போது, அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாத போது, அந்த குற்றத்தை செய்ய தடைவிதிக்க கோர முடியாது. அப்படி தடை விதிக்கவும் முடியாது. பொலிசார் கற்பனையில் வழக்கு தொடர முடியாது. ஒருவர் குற்றத்தை செய்வார் என பொலிசார் கற்பனை பண்ண முடியாது. இலங்கை சட்டங்களிற்கு உட்பட்டு வழக்கு தொடர வேண்டும்’ என பொலிசாருக்கு கண்டிப்பான அறிவுரை வழங்கினார்.
மாவீரர்தினம் வரையான நாட்களில் குறிப்பிட்ட 8 இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளையும் நிறுத்துமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்தனர்.
தாம் மாவீரர்நாளை அனுட்டிக்க தயாராகவில்லையென ஆலய நிர்வாகம் தெரிவிக்கும் போது, அவர்கள் மாவீரர்தினத்தை அனுட்டிக்கப் போகிறார்கள் என தடைவிதிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டிய, ஆலய வழிபாட்டு தடை கோரிக்கையை ஏற்க முடியாதென அறிவித்தார்.
இதேவேளை, யாரேனும் சட்டங்களை மீறி செயற்பட்டால், தமக்கிருக்கும் அதிகாரம், சட்ட ஏற்பாடுகளிற்கமைய அவர்களை கைது செய்து வழக்கு தொடர முடியுமென்றும் தெரிவித்தார்.