தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட குழுவினர் மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதிக்க வேண்டுமென சாவகச்சேரி, கொடிகாமம் பொலிசார் தாக்கல் செய்த மனுவை, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதேநேரம், சட்டவாக்க சபையில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை சட்டங்களை நன்கறிவார்கள் என்று சுட்டிக்காட்டிய நீதிவான், யாரேனும் சட்டமீறலில் ஈடுபட்டால் பொலிசார் கைது செய்ய முடியுமென்றும் குறிப்பிட்டார்.
சாவகச்சேரி பொலிசாரால், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய்பட்ட வழக்கில், மாவீரர்நாள் அனுட்டிக்க 13 பேருக்கு தடை கோரப்பட்டிருந்தது.
இதில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், த.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகள், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோர் உள்ளிட்டவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
கொடிகாமம் பொலிசாரால் 4 பேருக்கு எதிராக தடை கோரப்பட்டிருந்தது.
இவர்கள் அனைவரையும், இன்று (22) காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்று இந்த வழக்கு நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், சதீஷ், புவனேந்திரன் ஆகியோர் முன்னிலையாகினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், பொலிசாரின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
பொலிசார் பெயர் குறிப்பிட்டுள்ள பலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். சட்டவாக்கசபையில் அங்கம் வகிக்கும் அவர்களிற்கு இலங்கையின் சட்டங்கள் நன்றாக தெரிந்திருக்கும். அவர்கள் மாவீரர்நாள் அனுட்டிக்கப் போகிறார்கள் என கூறி, நீதிமன்றம் தடைவிதிக்க முடியாது.
எனினும், இலங்கையின் சட்டங்களை யாராவது மீறினால் அவர்களை பொலிசார் கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்த முடியும் என்றார்.