பெரும் போகத்திற்கு தேவையான இரசாயன உரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான ஏனைய இரசாயன திரவியங்களை பெற்றுதருமாறு கோரி நுவரெலியாவில் இன்று (21) விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
பிரதேச விவசாயிகளுடன் இணைந்து தேரர்களும் இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர். போராட்ட பேரணியானது நுவரெலியா காமினி தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பதுளை நுவரெலியா பிரதான வீதியினூடாக நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக சென்றடைந்தது.
அங்கு போராட்டமானது தொடர்ந்து சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இடம்பெற்றன. சுமார் 2000 பேர் வரை கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டு, பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா, கந்தபளை, மீபிலிமான, நானு ஓயா, ஆகிய நகரங்களில் உள்ள கடைகளை மூடி இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளும் தடைபட்டிருந்தன.
பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தை சாதாரண விலைக்கு வழங்க வேண்டும், பூச்சிக்கொல்லிகளை வழங்க வேண்டும், நியாயமான விலையில் திரவ உரத்தை வழங்க வேண்டும், உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்படி பிரச்சினைகளுக்கு ஒரு வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், தற்போது பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளை சந்தைக்கு விடுவிப்பதில்லை என்று ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார வலய மத்திய நிலையங்களின் சங்க தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்குமாறு கோரி நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவிடம் கையளித்தனர். இந்த போராட்டம் காரணமாக பல மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேசத்தில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட மலையக மரக்கறிகள் இன்று சந்தைக்கு கிடைக்காமையால் சந்தையில் மலையகம் உள்ளிட்ட மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலைகள் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
–க.கிஷாந்தன்-