மத்திய பிரதேசத்தில் அமேசான் நிறுவனத்தின் பார்சல்கள் மூலம் கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில், அந்நிறுவனம் உரிய ஒத்துழைப்பு தராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
ம.பி.யின் பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு கடந்த 15ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு போலீஸார் நடத்திய சோதனையில், அமேசான் நிறுவன பார்சல்களில் 1,000 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ம.பி. உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக சிலரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதில், அமேசான் இ-காமர்ஸ் வலைதளத்தில் கறி வேப்பிலை என பதிவு செய்து கஞ்சா கடத்தப்பட்டிருப்பது அம்பல மாகியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக அமேசான் இந்தியா நிறுவனத் திற்கு மத்திய பிரதேச போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். அதன்படி, அந்நிறுவன நிர்வாகிகள் கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸ் முன்பு ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால், இதுவரை அவர்கள் ஆஜராகவில்லை.
இந்த விவகாரம் குறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், “கஞ்சா கடத்தல் வழக்கில் உரிய நோட்டீஸ் பிறப் பிக்கப்பட்ட போதும், அமேசான் இந்தியா நிறுவன நிர்வாகிகள் ஆஜராகவில்லை. மேலும், இதுதொடர்பான விசாரணைக்கும் அவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்ற னர். இந்தப் போக்கு தொடர்ந்தால் அந்நிறுவனம் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.