மணிப்பூர் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் சீனா இருப்பதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மணிப்பூரின் குகா பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படையின் கமாண்டராக கர்னல் விப்லவ் திரிபாதி (41) பணியாற்றி வந்தார். கடந்த 13ஆம் தேதி அவர் தனது மனைவி அனுஜா (36), மகன் அபிர் (5) ஆகியோருடன் மணிப்பூரின் தேஹங் பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் திரிபாதி அவரது மனைவி, மகன் மற்றும் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல் குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உளவுத் துறை வட்டாரங்கள் கூறியிருப்பதாவது:
கர்னல் விப்லவ் திரிபாதி மீதான தாக்குதலுக்கு மக்கள் விடுதலை இராணுவம் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 1978ஆம் ஆண்டு சீனா மற்றும் அதன் நட்பு நாடான மியான்மரின் ஆதரவுடன் இந்த தீவிரவாத அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் மேத்தா இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சேர்க்கப்படுகின்றனர். மணிப்பூரின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மேத்தா இன மக்கள் ஆவர். இந்த இனத்தைச் சேர்ந்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாதிகளாக்கி வருகின்றனர். அவர்களுக்கு ஆயுத, பண உதவிகளை சீனா செய்து வருகிறது.
திரிபாதியின் பயண திட்டம் தீவிரவாதிகளுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. அவர் மீது தாக்குதல் நடத்த சுராசந்த்பூர் வனப்பகுதியை தீவிரவாதிகள் தேர்வு செய்துள்ளனர். ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 30 தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். முதலில் கண்ணிவெடி மூலம் வாகனங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. அதன் பிறகு கர்னலின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
கர்னல் விப்லவை குறிவைத்தது ஏன்?
துப்பாக்கி குண்டுகள் இடுப்புக்கு மேலே பாயும் வகையில் தீவிரவாதிகள் சுட்டுள்ளனர். பயிற்சி பெற்ற தீவிரவாதிகளால் மட்டுமே இவ்வாறு சுட முடியும். தாக்குதலை நடத்திவிட்டு வனப்பகுதிக்குள் தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர். அவர்களை யாரும் பின்தொடர முடியாத வகையில் வனப்பகுதிக்கு தீ வைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் எளிதாக அண்டை நாடான மியான்மருக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தானில் இருந்து மியான்மர் வழியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர். இதைத் தடுக்க திரிபாதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அண்மையில் அவர் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி மிகப்பெரிய அளவில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தார். இதனால் அவரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தியாவின் வியூகம்
சர்வதேச அரங்கில் தென்சீனக் கடல், தைவான், திபெத் விவகாரங்களில் சீனாவுக்கு எதிராக இந்தியா காய் நகர்த்தி வருகிறது. லடாக் மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்துக்கு எதிராக இந்திய இராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு பழிவாங்கும் வகையில் தீவிரவாதிகள் மூலம் வடகிழக்கின் அமைதியை சீர்குலைக்க சீனா தீவிர முயற்சிகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாகவும் கர்னல் விப்லவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் மியான்மர் எல்லைக்குள் இந்திய ராணுவம் நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்தது. சுமார் 38 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதேபோல மீண்டும் மியான்மர் எல்லைப் பகுதிகளில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மேத்தா இன மக்கள் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த இன மக்களில் பெரும்பான்மையினர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். மக்களின் ஆதரவோடு மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளை அழிக்க வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சீனாவின் ஆதரவுடன் மியான்மரில் இருந்து நடைபெறும் போதைப் பொருட்கள் கடத்தல், ஆயுத கடத்தலை தடுக்க ராணுவம், மத்திய பாதுகாப்பு படைகள், உள்ளூர் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்மூலம் மக்கள் விடுதலை ராணுவ தீவிரவாத அமைப்பு விரைவில் வேரறுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.