கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்ட பிறகும் கூட, மூன்றில் ஒரு இந்தியருக்கு மீண்டும் அலுவலகம் சென்று பணிபுரிய விருப்பமில்லை என சர்வதேச அளவில் நடைபெற்ற ஓர் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் மாதம் தேசிய அளவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
அதன் ஒருபகுதியாக, பள்ளி,கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டன. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டன. அப்போது முதல் சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக ஐ.டி. உள்ளிட்ட தனியார் நிறுவனஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வருகிறார்கள். ஆரம்பம் முதல் அலுவலக சூழலுக்கு பழக்கப்பட்ட ஊழியர்களுக்கு, வீட்டில் இருந்து பணிபுரிவது சிறிது கடினமாக இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல வீட்டுச் சூழலில் அலுவலகப் பணியை மேற்கொள்வது அவர்களுக்கு பழகிப்போனது.
இதனிடையே, நாட்டில் தற்போது கரோனா அச்சுறுத்தல் வெகுவாக குறைந்திருப்பதால், பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகம் வருமாறு அழைக்க தொடங்கியுள்ளன.
12% பேர் விருப்பம்
இந்நிலையில், இதுதொடர்பாக உலக அளவில் டிங் குளோபல் ப்ரீபெய்ட் இன்டெக்ஸ் நிறுவனம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, மூன்றில் ஒரு இந்தியர் அதாவது 32 சதவீத ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் சென்று பணிபுரிய தங்களுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்து பணிபுரியவே அவர்கள் விரும்புகின்றனர். அதே சமயத்தில், 12 சதவீத ஊழியர்கள் அலுவலகம் சென்று பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரம் சீராகும்
கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார பாதிப்பு குறித்த கேள்விகளுக்கு 52 சதவீத இந்தியர்கள் நேர்மறையான பதில்களை அளித்துள்ளனர். அதாவது, பொருளாதார சூழல் சீராகிவிடும் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இவ்வாறு, பொருளாதார சூழல் குறித்த கேள்விகளுக்கு நேர்மறையான கருத்து தெரிவித்ததில்இந்தியர்களே அதிகம் எனக் கூறப்படுகிறது.