அண்மையில் வெலிசறை மஹபாகேயில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத 16 வயதுடைய சிறுவன், தனது தந்தையின் மொண்டெரோ சொகுசு வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தினார்.
விபத்தை ஏற்படுத்திய சமயத்தில், சிறுவனுடன் யுவதியொருவரும் வாகனத்தில் பயணித்திருந்தார்.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் காஸ் சிலிண்டரை ஏற்றி வந்த இருவரே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவரான விக்கிரம குணசேகர அமரசிறி அதே தினத்தில் உயிரிழந்ததுடன். அவரது 17 வயதுடைய மருமகன், சுமார் ஒருவாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்த சமயத்தில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவியது.
விபத்தைடுத்து எரிவாயு சிலிண்டர் வீதியோரம் உருண்டு சென்றது. ஆனால் அது பின்னர் காணாமல் போனது. யாரோ திருடிச் சென்றுவிட்டனர்.
உயிரிழந்த அமரசிறி இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்.
நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவிய சந்தர்ப்பம் அது.
புதிய எரிவாயு வந்துள்ளதைக் கேள்விப்பட்ட அவர், தனது மருமகனான 17 வயதுடைய டினிந்து அகலங்கவுடன் எரிவாயுவைத் தேடி பயணித்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் எரிவாயு சிலிண்டர்களை கண்டார். வீட்டுக்கு சென்று, காலி சிலிண்டரை எடுத்து வருவதற்குள் எரிவாயு தீர்ந்து விடலாமென்ற அச்சத்தில், கடைக்காரருடன் பேசி, புதிய சிலிண்டர் ஒன்றை பெற்றார். வீட்டுக்கு சென்று காலி சிலிண்டரை எடுத்து வருவதாக வாக்களித்திருந்தார்.
எரிவாயு சிலிண்டருடன் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்து நேர்ந்தது.
அமரசிறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மருமகன் மருத்துவமனையில் மரணத்துடன் போராடி ஏழு நாட்களின் பின் உயிரிழந்தார். டினிந்து அகலங்க இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார்.