யஹியாகான் பவுண்டேசனின் 12வது வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் மற்றும் கெளரவிப்பு நிகழ்வும் அமைப்பின் ஆயுள் கால தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஏ.சி. யஹியாகான் தலைமையில் மாளிகைக்காடு வபா றோயல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக ஏ.சி. யஹியாகானும், செயலாளராக ஏ.சி.எம்.றியாலும், உபதலைவர்களாக ஏ.எல்.சினந்துறை, எஸ்.நிப்ராஸ், எஸ்.றிஸான், எஸ்.நிபார், எம்.வை.எம். ஹுசைன், எம்.பி.எம். ஹனீபா, ஆர்.எம். இம்தாத், எம்.எம்.நிலாம், எம்.எம்.எம். சக்கி, எஸ்.எல்.எம். யூசூப், எம்.ஏ.அலிகான், ஏ.நிஸார், எம்.பி.எம். சியாம் ஆகியோரும் பொருளாளராக எம்.ஏ.எம்.ரஸ்பாஸ், உப செயலாளராக ஆர்.எம். றிபாத், உப பொருளாளராக நிம்னாஸ், கொள்கைப்பரப்பு செயலாளராக எஸ்.எம். றியாஸ், ஊடக பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.வை. அமீர், மக்கள் தொடர்பாடல் செயலாளராக ஏ.எல். பஸீல் ஆகியோர் சபையினரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.ஏ.அப்துல் மஜீத் (முழக்கம் மஜீட்) மற்றும் அண்மையில் தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு தெரிவாகிய அமைப்பின் அங்கத்தவர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். வை. அமீரின் புதல்வி பர்கத் ஜெபீன் மறறும் எம்.ஜவாஹீரின் புதல்வி பாத்திமா ஜெஸ்மீன் ஆகியோர் உட்பட அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து சொந்த நிதியைக்கொண்டு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள், கல்வி முன்னேற்ற நடவடிக்கைகள், 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான குடிநீர், மின்சார இணைப்புக்கள், உலருணவு உதவிகள், சுயதொழில் ஊக்குவிப்புக்களை செய்துவரும் இந்த யஹியாகான் பவுண்டேசன் கடந்த கொரோனா அலையில் நிறைய உதவிகளை செய்துள்ளது. கல்முனை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு சாய்ந்தமருது பொலிவேரியன் பொது மைதானத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு நவீன மைதானமாக உருவாக்கித்தர வேண்டும். மட்டுமின்றி சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் விளையாட்டு பூங்கா அபிவிருத்தி , கல்முனை சந்தங்கனி மைதானம் அபிவிருத்தி, கல்முனை மாநகரசபை கட்டிடம் என்பவற்றை நிர்மாணிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது தேர்தல்காலங்களில் எங்களின் சொந்த நிதியிலிருந்து செலவழித்து, மாவட்டத்தின் பல மேடைகளிலும் பேசி அவருக்காக தேர்தல் செய்தவர்கள் என்ற உரிமையுடன் இந்த கோரிக்கைகளை அவருக்கு பகிரங்கமாக முன்வைக்கிறேன் என யஹியாகான் பவுண்டேசனின் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளரும் அக்கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஏ. சி . யஹியாகான் இந்நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த 04 வருடங்களாக தோடம்பழ அணியும், கடந்த பொத்துத்தேர்தல் வேட்பாளர் ஏ.எல்.எம். சலீமும், கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது உறுப்பினர்களும் நகரசபையை பெற தங்களால் முடிந்தளவு போராடியுள்ளார்கள். 13 ஆயிரம் வாக்குகளை சாய்ந்தமருது மக்கள் அவர்களுக்கு இந்த கோஷத்தை முன்வைத்து வழங்கியிருந்தனர். ஆனாலும் அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது. கொழும்பில் அதிக காலத்தை செலவளிப்பவர்கள் என்ற அடிப்படையில் பல அமைச்சர்களுடனும் பல அரச அதிகாரிகளுடனும் நெருங்கிய உறவை கொண்டுள்ள எங்களினால் இந்த விடயத்தை கையாண்டு வெற்றிகான முடியும் என்று நம்புகிறேன். மு.கா வை அழிக்கவும், தலைவரை குற்றம் கூறிக்கொண்டும் இருப்பவர்கள் மு.கா தலைவர் போன்ற சர்வதேசம் அங்கீகரித்த திறமையான ஒருவரை காட்டட்டும். அவர்களால் அது முடியாது. சமூகத்திற்காக உழைப்பவர்கள் நாங்கள் என்றார்.